கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறி கேள்வி கேட்ட காவலரின் மனைவி.. போராட்டக் களமாக மாறிய பரப்புரை
TV9 Tamil News April 12, 2026 03:48 PM

Tamilnadu polls 2026: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் ரோடு ஷோ மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் நேற்றைய தினம் திமுக எம்.பி கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.  இதனிடையே, ஆலங்குளம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த திமுக எம்.பி கனிமொழியிடம், காவலர் ஒருவரின் மனைவி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம் அருகே உள்ள மருதம்பத்தூர் கிராமத்தில் சமீபத்தில் விவசாயி ஒருவரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி கேட்டு ஆலங்குளம் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, காவலர் பிரபாகரன் உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க: “அடுத்த 10 நாட்கள் மிக முக்கியம்”.. தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட கட்டளை.. அதிரும் தேர்தல் களம்!!

வாக்குவாதமும், கோரிக்கையும்:

இந்நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட காவலர் பிரபாகரனின் மனைவி பிளஸ்சி, நேற்றைய தினம் கனிமொழி பிரசாரம் செய்து கொண்டிருந்த வாகனத்தில் திடீரென ஏறி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். “நீதி கேட்டுப் போராடுபவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடுவது எந்த விதத்தில் நியாயம்? போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் உள்ளிட்டோர் மீது போடாத எப்.ஐ.ஆர், என் கணவர் மீது மட்டும் ஏன் போடப்பட்டது?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

கட்சியின் மீதான பற்று:

தான் கடந்த நான்கு ஆண்டுகளாக திமுகவில் இருப்பதாகவும், “சொந்த வீட்டில்தான் உரிமை கேட்க முடியும்” என்ற அடிப்படையில் தனது கோரிக்கையை முன்வைத்ததாகவும் பிளஸ்சி தெரிவித்தார். பிளஸ்சியின் கேள்விகளுக்குப் பதிலளித்த கனிமொழி, “இந்த விவகாரம் குறித்துத் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நான் முதலமைச்சரிடம் பேசி உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்” என்று கூறினார். பின்னர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் பிளஸ்சியை வாகனத்திலிருந்து கீழே இறக்கிவிட்டனர்.

தேர்தலைப் புறக்கணிப்போம்:

சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிளஸ்சி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒரு சாதாரணக் குடிமகனைச் சுடுவது சட்டப்படி தப்பு என்று கேட்டதற்காக, காவலராக இருந்த என் கணவர் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், “காவல் நிலையத்தில் சென்று கேளுங்கள்” என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். சரியான நீதி கிடைக்காத பட்சத்தில் ஆலங்குளம் மக்கள் இன்னும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவார்கள். “எங்கள் போராட்டத்திற்கு யார் நீதி வழங்குகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு. இல்லை என்றால் தேர்தலைப் புறக்கணிப்போம்” என்று அவர் எச்சரித்தார்.

இதையும் படிக்க: பணம் இல்லை.. அது ஒன்னு தான்.. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமான பேச்சு!

இந்தச் சம்பவத்தால் ஆலங்குளம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. தனது கட்சித் தொண்டரே பிரசார வாகனத்தில் ஏறித் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்தது திமுக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.