10,000 ரூபாய் அனைத்து குடும்ப வங்கி கணக்கில் வரவு வைப்போம் - எடப்பாடி பழனிசாமி..!
Top Tamil News April 15, 2026 10:48 AM

அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமாரை ஆதரித்து செக்கானூரணியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மூக்கையா தேவர் ஆகியோர் மக்கள் மனதில் வாழும் தலைவர்கள். இந்த மண்ணில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். அதிமுகவை பொறுத்தவரை மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சியாகும். திமுக குடும்பத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி. மக்களுக்கான தேவைகளை கருத்தில் கொண்டு திட்டங்களை கொண்டு வருவோம். ஆனால் திமுக தங்கள் குடும்பத்துக்காக திட்டங்களைக் கொண்டு வரும். இதுதான் திமுகவிற்கும்,அதிமுகவிற்கும் வேறுபாடு.

தீய சக்தி திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என்ற நமது தலைவர்களின் சபதத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நாம் தான் பிள்ளைகள். நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்கள். மாறாக தனது குடும்பத்திற்காக வாழ்ந்தவர் தான் கருணாநிதி. அதிமுக என்ற இயக்கத்தை உடைக்க முயன்ற போது பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் ஆகியோரின் துணையோடு அந்த முயற்சியை தூளாக்கினோம். இன்றைக்கு அதிமுக புதுப்பொலிவுடன் தேர்தலை சந்தித்து வருகிறது. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது .

நம் கூட்டணி இயற்கையான கூட்டணி, வெற்றி கூட்டணி. 234 தொகுதிகளில் 210 தொகுதியில் தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சிக்காலத்தில் சாலைகள், கல்லூரிகள், பாலங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். பள்ளிக்கூடங்களை திறந்தது அதிமுக. அவற்றை மூடியது திமுக.

கரோனா பெருந்தொற்று காலங்களில் ஏழைகள் பாதிக்கக்கூடாது என அரிசி, எண்ணெய், சர்க்கரை இத்துடன் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வழங்கினோம். தைப்பொங்கலில் 2500 ரூபாய் வழங்கினோம். ஆனால் இன்றைக்கு மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, அரிசி விலை உயர்வு, பருப்பு விலை உயர்வு என மக்கள் வாங்க முடியாத அளவில் போராடி பெறுகிறார்கள்.

இந்த ஆட்சியில் போதை பொருள் புழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. நிச்சயம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சாவை அடியோடு ஒழிப்போம். அதேபோல திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கும் வங்கி கணக்கில் வரவு வைப்போம். அதே போல ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும். 5 லட்சம் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். தீபாவளி அன்று புடவை வழங்கப்படும். மகளிர் போல ஆண்களுக்கும் பேருந்தில் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கப்படும். தற்போது ரேஷன் கடையில் அரிசி நயமாக இல்லை, அரிசி தரமாக வழங்கப்படும். அதேபோல பருப்பு எண்ணெய் கூடுதலாக வழங்கப்படும் .

அதேபோன்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். குலவிளக்கு திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தால் பத்து லட்ச ரூபாய் வழங்கப்படும். அதேபோல ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் அரசே செலுத்தும். கட்டிட தொழில் செய்யும் போது தவறி விழுந்து மரணம் அடைந்தால் 25 லட்ச ரூபாய் வழங்கப்படும். மாற்று திறனாளிகள் கடன்கள் ரத்து செய்யப்படும். ஆகவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் உதயகுமாருக்கு இரட்டை இலையில் வாக்களிக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.