கவிஞர் கண்ணதாசன் எந்தளவுக்கு வேகமாக பாடல்களை எழுதக்கூடியவர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். பேசிக்கிட்டு இருக்கும்போதே ஒரு பாடலை உருவாக்கி விடுவார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைத் தான் ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர் முகைதீனுடைய மகன் அபிபுல்லா ஒரு கட்டுரையில் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
ஒரு நாள் கண்ணதாசனுடன் அமர்ந்து அபிபுல்லா பேசிக்கொண்டு இருந்தபோது தயாரிப்பாளர் மாயாண்டி ஒரு துண்டுச்சீட்டை கண்ணதாசனிடம் நீட்டினார். துண்டுச்சீட்டுல எந்த மாதிரியான சூழலுக்கு அவசரமாக ஒரு பாடல் தேவைப்படுகிறது என்பதை விளக்கமாக எழுதியிருந்தார் மாயாண்டி.
அப்போது அங்கிருந்த ஸ்டூடியோவில் இருந்த இருவருக்கும் தகராறு ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. அவர்கள் பேசும்போது அப்படிப் பார்த்தாலும் தப்பு தான். இப்படி பார்த்தாலும் தப்பு தான் என்று ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி பேசியுள்ளனர். அதைக் கவனித்துக் கொண்டு இருந்த கண்ணதாசன் அடுத்த ஒரு நிமிடத்தில் பாடல் எழுதத் தொடங்கி விட்டார்.
”அப்படிப் பார்த்தாலும், இல்ல இப்படிப் பார்த்தாலும் பெண்களின் சொற்படி ஆடும் ஆடவர் எல்லாம் அப்புறம் இப்புறம் தப்புவதில்லை” என்று பாடலின் முதல் நான்கு வரிகளை எழுதினார் கண்ணதாசன். அடுத்து எழுதிய நாலு வரி தான் அசத்தல். ”கைப்பிடி நாயகன் காதலுக்காக கண்ணகி காத்திருந்தாள். அவள் காதலைத் தள்ளிய கோவலன் மார்பில் மாதவி சாய்ந்திருந்தாள். அப்போதும் அங்கு ஆண்டது எங்கள் அல்லிப் பரம்பரை தான்”.
என்ன ஒரு கவிநயம் பாருங்கள். இந்தப் பாடல் கண்ணதாசனும், அபிபுல்லாவும் பேசிக் கொண்டு இருக்கும்போது எழுதப்பட்டது. பேச்சுக்கிடையே எழுதப்பட்ட பாடல்னு யாராவது நம்புவார்களா? ஆனால் அங்கு தான் கண்ணதாசன் மற்ற கவிஞர்களிடம் இருந்து உயர்ந்து நிற்கிறார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.