ரூ.8,000 கூப்பன் கேட்ட பெண்ணுக்கு ஆபாச அர்ச்சனை.. மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்த பெண்ணால் பரபரப்பு!!
TV9 Tamil News April 15, 2026 05:48 PM

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, திருச்சி மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. திமுக தரப்பில் தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்ட ரூ.8,000 கூப்பனுக்கான மாதிரி விநியோகப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த மாதிரி கூப்பன்களை வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, துணிச்சலுடன் தலித் பெண் ஒருவர் கேள்வி எழுப்பவே, பதிலுக்கு திமுகவினர் அப்பெண்ணை ஆபாசமாகப் பேசி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாசப் பேச்சும் அவமதிப்பும்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த சிந்துஜா என்ற பெண், திமுக சார்பில் வழங்கப்படுவதாகக் கூறப்படும் ரூ.8,000 மதிப்பிலான மாதிரி கூப்பன்கள் விநியோகத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கிருந்த திமுக நிர்வாகிகளிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இளம்பெண் விபரீத முடிவு:

இந்த வாக்குவாதத்தின் போது, அங்கிருந்த திமுகவினர் சிந்துஜாவை ஒரு பெண் என்றும் பாராமல் மிகக் கேவலமான ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தலித் சமூகத்தை சேர்ந்தவரை பொது இடத்தில் வைத்து பெண் என்று கூடப் பாராமல், அவமானப்படுத்தியதால் மிகுந்த மனவேதனை அடைந்த சிந்துஜா, தனது வீட்டிற்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

உறவினர்கள் சாலை மறியல்:

சிந்துஜாவின் மரணச் செய்தி பரவியதும், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து திருச்சி – லால்குடி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.சிந்துஜாவின் தற்கொலைக்குக் காரணமான திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த மறியலால் அந்தப் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

அண்ணாமலையின் ஆவேசப் பதிவு:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகம்… pic.twitter.com/JIGsh0MgRN

— K.Annamalai (@annamalai_k)

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி. வாக்குக்காகப் பணத்தையும் கூப்பன்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றும் திமுக, தற்போது ஒரு பெண்ணின் உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்:

ஒரு தலித் பெண்ணைப் பொது இடத்தில் அவமானப்படுத்திய திமுகவினர் மீது உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், ஆளுங்கட்சி பலத்தைப் பயன்படுத்தி இந்தக் குற்றத்தை மறைக்க முயன்றால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

திருச்சியில் நீடிக்கும் பதற்றம்:

சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி – லால்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். “எங்கள் வீட்டுப் பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்கள் சிறைக்குச் செல்லும் வரை உடலை வாங்க மாட்டோம்” என அவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள போராட்டக்காரர்கள், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு அளிக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.