தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் கர. போர் தொழில் வெற்றிபடத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரேமலு, டியூட் புகழ் மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வவேற்பை பெற்றுள்ளது. வருகிற 30-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தில் ‘செல்லி’ என்ற அழுத்தமான கிராமத்து கதாபாத்திரத்தில் மமிதா பைஜு நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘கர’ படத்திற்காக மமிதா பைஜுவை நாயகியாக தேர்வு செய்தது குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா சிஅல் தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், “ஒரு சினிமாவுக்கு நடிகைகளைத் தேர்வு செய்யும்போது அவர்களின் நடிப்புத் திறன், மார்க்கெட் வேல்யூ ஆகியவற்றுடன் அந்த குறிப்பிட்ட கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு அவர்கள் 100 சதவீதம் பொருந்துகிறார்களா என்பது மிகவும் அவசியம். ‘கர’ படத்திற்காக நாயகியைத் தேடியபோது சுமார் 20-ல் இருந்து 25 நடிகைகளிடம் நாங்கள் ஆடிஷன் நடத்தினோம். ஆனால், மமிதா பைஜு வெளிப்படுத்திய அசாத்திய திறமைக்கும், கதாபாத்திரத்தின் தன்மைக்கும் வேறு யாரும் சமமாக ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால்தான் அவரை ஒப்பந்தம் செய்தோம் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகவே, ‘தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளே இல்லை, பெரும்பாலும் மலையாளப் பெண்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது’ என இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. இது திரை வட்டாரத்தில் பல விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்த சூழ் நிலையில் விக்னேஷ் ராஜாவின் இந்த கருத்து இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைப்பதாக உள்ளது.