நடிகர் விஜய் நடித்து ஜனநாயகன் படத்தை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் நடிகர் விஜயின் 69வது படமாக உருவானது “ஜனநாயகன்”. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் வெளியான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மமிதா பைஜூ, நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், யோகிபாபு என ஏகப்பட்ட பேர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ஜனநாயகன் படம் 2026ஆம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்னையில் சிக்கியதால் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கேவிஎன் பட நிறுவனம் நேரடியாக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடியது. இருந்தாலும், ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பட வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும், விஜய் தேர்தலில் போட்டியிடுவதால் விதிகள் காரணமாக ஜனநாயகன் படம் மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. முதலில் 5 நிமிட காட்சி என சொல்லப்பட்ட அந்த படம் 3 மணி நேரம் முழுவதுமாக ரிலீசானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் ஜனநாயகன் படக்குழுவுக்கு ஆதரவாக இருந்தது. உடனடியாக பட நிறுவனம் தரப்பில் சைபர் கிரைம் போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். சமூக வலைத்தளங்கள், டெலிகிராம் செயலி மூலம் படத்தை வெளியிட்டவர்கள் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் உதவி எடிட்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் சேர்த்து மேலும் 2 பேர் கைதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகன் படம் வெளியான நிலையில் அதில் எடிட்டிங் குறியீடு தொடர்பான காட்சிகள் இருந்ததால் அதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.