மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய சீமான், வாக்குக்கு காசு கொடுப்பவர்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள் என்று கடுமையாக சாடினார். திராவிட ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்தும் அவர் ஆவேசமாக பேசினார்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டார்.
மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் காசிராமன், சீர்காழி வேட்பாளர் சுபாஷ் மற்றும் பூம்புகார் வேட்பாளர் இளையநகுலன் ஆகியோரை மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு 'விவசாயி' சின்னத்தில் வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் பணத்தைப் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் சீமான். "வாக்கினை விலைக்கு வாங்கத் துடிப்பவர்களுக்கு உங்கள் ஓட்டுதான் முக்கியமே தவிர, உங்கள் முன்னேற்றம் அல்ல. ஓட்டைப் பற்றி மட்டும் சிந்திப்பவன் ஒருபோதும் நாட்டைப் பற்றிச் சிந்திக்க மாட்டான். உங்கள் வீட்டில் புகுந்து 10 லட்சம் ரூபாயைத் திருடிவிட்டு, அதில் வெறும் 10 ஆயிரம் ரூபாயை உங்களுக்கே திருப்பிக் கொடுப்பவனை நீங்கள் ஏற்பீர்களா?
அதேபோல் தான், நாட்டில் பல லட்சம் கோடிகளை ஊழல் மூலம் கொள்ளையடித்துவிட்டு, தேர்தல் நேரத்தில் டோக்கன்களையும், பணத்தையும் கொடுத்து மக்களின் தன்மானத்தை விலைக்கு வாங்குகிறார்கள். இது ஜனநாயகம் அல்ல, பணநாயகம்," என்று அவர் சாடினார்.
தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளால் எந்தவித அடிப்படை மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகளை பட்டியலிட்டார்.
தமிழகத்தில் 70 லட்சம் பட்டதாரிகள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேலை கொடுக்கத் துப்பில்லாத அரசு, இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறது.
கடன் சுமை:
தமிழகத்தின் கடன் சுமை தற்போது 10.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வளவு கடன் வாங்கியும் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
போராடும் வர்க்கம்:
ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் விவசாயிகள் என சமூகத்தின் அனைத்துத் தூண்களும் இன்று தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக வீதியில் நின்று போராடும் அவல நிலைதான் உள்ளது. மதுக்கடைகளைப் பாதுகாப்பதில் காட்டும் அக்கறையை, அரசு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் காட்டவில்லை.
மக்களின் தேர்தல் அணுகுமுறை குறித்துப் பேசிய அவர், "நாம் ஒரு சின்னப் பொருள் வாங்கச் சென்றாலும் அது தரமானதாக இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து வாங்குகிறோம். ஆனால், நாட்டை ஆளப்போகும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மட்டும் தற்குறிகளையும், திருடர்களையும், தருதலைகளையும் ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்? ஒருமுறை ஏமாந்தது போதாதா? திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நீங்கள் கண்ட ஏற்றம் என்ன?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய சீமான், "விவசாயிக்கு விவசாயியே வாக்கு அளிக்காவிட்டால் வேற்று கிரகத்திலிருந்தா வந்து வாக்கு செலுத்துவார்கள்? மீத்தேன், பயோ கேஸ் போன்றவற்றை மாட்டுச் சாணத்திலிருந்தே எடுக்க முடியும் என்ற தொழில்நுட்பம் உள்ளபோது, எதற்காக மண்ணைத் தோண்டி பூமித்தாயின் நீர்க்குழாய்களை அறுக்கிறீர்கள்?" என்று இயற்கை வளச் சுரண்டல் குறித்துக் கவலை தெரிவித்தார்.
"நாங்கள் அதிகாரத்தில் இல்லாமலேயே லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளோம், பனை விதைகளை விதைத்துள்ளோம். மயிலாடுதுறை வேட்பாளர் காசிராமன், தனது சொந்த முயற்சியில் பகுதி மக்களுக்குக் கிணறு வெட்டித் தூய குடிநீர் வழங்கி வருகிறார். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் முழுவதும் இதேபோல் சுகாதாரமான குடிநீர், தரமான கல்வி மற்றும் நஞ்சில்லா உணவை உறுதி செய்வோம்," என்று உறுதியளித்தார்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர்,
"முதல் தேர்தலில் 4.5 லட்சம் வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, அடுத்தடுத்த தேர்தல்களில் 18 லட்சம், 30 லட்சம் என அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இன்று திமுக, அதிமுகவுக்கு மாற்றாகத் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக மக்கள் எங்களை அங்கீகரித்துள்ளனர். முன்னர் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய நிலையில் இருந்த எங்களது சின்னம், இன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு வாக்குப்பெட்டியின் முதல் இடத்திலேயே உள்ளது. உலகிற்கு உணவளிக்கும் விவசாயி எப்போதும் முதலிடத்தில்தான் இருக்க வேண்டும்," என்றார்.
இறுதியாக உரையை நிறைவு செய்த சீமான், "திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிப்பது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு நீங்கள் அளிக்கும் ஒரு வாக்கு என்பது வரலாற்றில் ஒரு புரட்சியாக அமையும். தமிழ் இனத்தின் விடுதலைக்காகவும், ஊழலற்ற தூய அரசியலுக்காகவும் மக்கள் 'விவசாயி' சின்னத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்," என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.