புதுச்சேரி அருகே வாங்கிய பணத்தை கொடுக்க மறுத்த, பெண் கட்டிட தொழிலாளியை கொலை செய்து தமிழகப் பகுதியில் புதைத்த கட்டிட மேஸ்திரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் பெரம்பை வாழபட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(58).கட்டிட தொழிலாளி. இவரின் மனைவி அமுதா (53), கட்டிட கூலி தொழிலாளி. கடந்த 11ந் தேதி அமுதாவை அவரின் மகன் வடிவேலு வில்லியனுார் எம்ஜிஆர் சிலை அருகே பஸ்சில் செல்ல இறக்கிவிட்டார். அதன்பின் அவர் தனது வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து வடிவேலு தாயாரை காணவில்லை என வில்லியனுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து அமுதாவை தேடி வந்தனர். விசாரணையில் மாயமான அமுதா, புதுச்சேரி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மேஸ்திரி பரந்தாமன் என்பவரிடம், கட்டிட வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பரந்தாமனை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அமுதாவை கொலை செய்து புதைத்து விட்டதாக பரந்தாமன் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் கூறியதாவது, மேட்டுப்பாளையம் தர்மாபுரியில் நான் வசித்து வருகிறேன். வீடு கட்டித்தருவது தான் என் வேலை. என்னிடம் பலர் கட்டிட பணி செய்கின்றனர். அதில் அமுதாவும் ஒருவர். என்னிடம் வேலை பார்க்கும் போது எனக்கும், அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது அமுதா பணம் வாங்குவார். சிறிது, சிறிதாக ரூ.3.50 லட்சம் அளித்திருந்தேன். அந்த பணத்தை திரும்ப கேட்ட போது, ஏமாற்றி வந்தார். என்னிடம் வேலைக்கு வருவதை நிறுத்தி விட்டு, புதுச்சேரியில் ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். கடந்த 11ந் தேதி அமுதாவிடம் நைசாக பேசி ஜாலியாக இருக்கலாம் வா என அழைத்தேன். அமுதா வந்தவுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு விழுப்புரம் பகுதி பூத்துறைக்கு சென்றேன். பூத்துறையில் வைத்து மீண்டும் கொடுத்த பணத்தை கேட்டேன். அவர் தனது மகனிடம் கூறி விடுவேன் எனக்கூறி மிரட்டினார். இதனால் நண்பர்கள் 4 பேர் உதவியுடன், அமுதாவை அடித்து கொலை செய்தேன். அங்கே ஒரு இடத்தில் குழிதோண்டி அமுதாவின் உடலை புதைத்துவிட்டோம் என தெரிவித்தார்.
இதனையடுத்து வில்லியனுார் போலீசார், ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆரோவில் இன்ஸ்பெக்டர் திருமலை, வானுார் தாசில்தார் வித்யாதரன், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பரந்தாமன் காண்பித்த இடத்தை தோண்டினர். அங்கு புதைக்கப்பட்ட அமுதாவின் உடலை எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தினர். பின்னர் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பரசுராமனுக்கு உதவிய 4 பேரையும் பிடித்த வில்லியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை நடந்தது ஆரோவில் பகுதி என்பதால், ஆரோவில் போலீசுக்கு வழக்கு மாற்றப்படும் என தெரிகிறது.