டைம் இதழ் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டுப் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெறாதது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா ஆகிய மூன்று இந்திய ஆளுமைகள் இந்த பெருமைமிகு பட்டியலில் இடம்பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
உலகத் தலைவர்கள் பிரிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போப் லியோ XIV மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருடன் நேபாள பிரதமர் பாலன் ஷா மற்றும் வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தொழில்நுட்ப துறையில் சுந்தர் பிச்சையுடன் யூடியூப் சிஇஓ நீல் மோகன் மற்றும் ஓபன் ஏஐ அதிகாரி சாரா பிரையர் ஆகியோரும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கலைஞர்கள் பிரிவில் ரன்பீர் கபூர் இடம்பெற்றது இந்திய திரைத்துறைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்தப் பட்டியல் அமைந்துள்ளது.
Edited by Siva