தொகுதி மறுவரையறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடந்த நிலையில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, திமுக எம்பி ஆ.ராசா இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது கூட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை மாற்றியமைக்கும் பொருட்டு தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்றவுள்ளது. இதற்கான விவாதம் இன்று இரு அவைகளிலும் நடைபெற்றது. தொகுதி மறுவரையறை செய்தால் நாடாளுமன்றத்தில் 543 என இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் தென் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் இதனால் குறையும் எனவும் கூறப்படுகிறது.
அதனால் தென் மாநிலங்களில் தொகுதி மறுவரையறை விஷயத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இன்றைய கூட்டத்தொடரில் கருப்பு உடை அணிந்து திமுக எம்.பி.,க்கள் பங்கேற்றனர். அதன் எதிரொலியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்தும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதற்கிடையில், “மக்களவையில் பெங்களூரு தெற்குத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா பேசுகையில், “மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியுள்ள தெற்கு மற்றும் சிறிய மாநிலங்களுக்கு மத்திய அரசு தற்ஓது முன்மொழிந்துள்ளதை விட சிறந்த இடங்கள் கிடைக்காது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென் மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். இதை விட சிறந்த ஒப்பந்தம் கிடைக்காது. தொகுதி மறுவரையறையை ஒரு பாதகமாகப் பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தில் திமுக நடத்தும் போராட்டங்கள் நாடகம் என விமர்சித்தார். மசோதாக்கள் குறித்து மக்களைத் தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறது” என குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசா, “1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்த போது நாட்டைக் காக்க ரூ.6 கோடி நிதி கொடுத்தோம். இது மற்ற மாநிலங்களை விட அதிகம். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கார்கில் போருக்கான கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு ரூ.100 கோடி கொடுத்தது.
எனவே நாட்டுப்பற்றை அவர் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை.
நாங்களும் தேசத்திற்காகவே நிற்கிறோம். ஒரே விஷயம் என்னவென்றால் நாங்கள் தனித்த அடையாளத்துடன் இருக்க விரும்புகிறோம். நீங்கள் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும்போது அதை எதிர்க்கிறோம். மாநில சுயாட்சிக்கு மரியாதை கொடுக்காத போது அதை எதிர்க்கிறோம்” என தெரிவித்தார்.