Amit Shah vs Akhilesh Yadav: "வீடுகளுக்கு சாதி கிடையாது" அமித் ஷாவின் ஒத்த வார்த்தை..மக்களவையில் வெடித்த வார்த்தைப் போர்!
ஜேம்ஸ் April 16, 2026 08:44 PM

மக்களவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு விவகாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. குறிப்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே ஏற்பட்ட நேரடி வார்த்தை மோதலால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது.

கேள்வி மேல் கேள்வி எழுப்பிய அகிலேஷ்

விவாதத்தைத் தொடங்கி வைத்த அகிலேஷ் யாதவ், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று கேள்வி எழுப்பினார். சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கை வலுக்கும் என்பதால், அரசு திட்டமிட்டே இதைத் தள்ளிப்போடுவதாக அவர் குற்றம் சாட்டினார். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே அரசு அவசர முடிவுகளை எடுத்து வருவதாகவும் அவர் சாடினார்.

பதிலடி கொடுத்த அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி தான் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்வதைக் குறிப்பிட்ட அகிலேஷ், உரிமைகள் மற்றும் கணக்கெடுப்பு என்று வரும்போது மட்டும் அரசு ஏன் தயங்குகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமித் ஷா, எதிர்க்கட்சிகள் பொதுமக்களிடையே வீண் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாகக் கூறினார். "மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது," என்று அவர் உறுதிப்படத் தெரிவித்தார். மேலும், தற்போது வீடுகளைப் பட்டியலிடும் பணி நடப்பதாகக் கூறிய அவர், "வீடுகளுக்கு சாதி கிடையாது. சமாஜ்வாதி கட்சியிடம் விட்டால் வீடுகளுக்கும் சாதி அடையாளத்தை வழங்கிவிடுவார்கள்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்களுக்கு இடஒதுக்கீடு: 

விவாதத்தின் ஒரு கட்டத்தில், சமாஜ்வாதி கட்சி விரும்பினால் தனது தேர்தல் சீட்டுகள் அனைத்தையும் முஸ்லிம் பெண்களுக்கே வழங்கலாம் என்று அமித் ஷா கூறியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ் முன்னதாகக் குறிப்பிட்ட முஸ்லிம் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்துப் பேசிய அமித் ஷா "மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காது. எனவே, முஸ்லிம் பெண்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு கோருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது."

இதற்குப் பதிலடி கொடுத்த அகிலேஷ் யாதவ், "முஸ்லிம் பெண்கள் இந்த நாட்டின் மக்கள் தொகையில் இல்லையா? பெண்களுக்கான இடஒதுக்கீடு என்று பேசும்போது, அதில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் உள்ளடக்கப்பட வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.