மேற்கு வங்காள சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந்தேதியுடன் முடிவடைவதை முன்னிட்டு, அங்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனால் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இஸ்லாம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியான சில புகார்களை முன்வைத்துள்ளார்டம் டம் விமான நிலையத்தில் தனது வாகனத்தை மத்தியப் படையினர் சோதனை செய்ய முயன்றதாகக் குறிப்பிட்ட மம்தா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் வாகனங்களை மட்டும் சோதனை செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சரின் வாகனங்களில் ஏன் சோதனை நடத்தப்படுவதில்லை என்று சாடிய அவர், மத்திய அமைச்சர்கள் பணத்துடன் வருவதாகவும் குற்றம் சாட்டினார். “உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், மற்றவர்களைச் சோதனை செய்வதற்கு முன்பு தினமும் எனது வாகனத்தைச் சோதனை செய்து பாருங்கள்” என அவர் மத்திய அரசுக்கு ஆவேசமாக சவால் விடுத்துள்ளார்.