"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி
Vikatan April 17, 2026 11:48 PM

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " மகளிர் நலனுக்காவே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.

தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று நான் கையெழுத்திட்டு தருகிறேன். நாட்டை தெற்கு வடக்கு என்று பிரிப்பதை ஏற்க முடியாது. பிரிவினை அரசியல் இங்கு எடுபடாது. மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு எவ்வித பாகுபாட்டையும் பார்க்கவில்லை.

கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இந்த ஐந்து மாநிலங்களின் பலம் தற்போதுள்ள 543 நாடாளுமன்ற இடங்களில் 129 ஆகும். ஆனால் தொகுதி மறுவரையறை செய்த பிறகு இந்த ஐந்து மாநிலங்களுக்கும் இடங்களை ஒதுக்கீடு செய்யும்போது, அது 129-லிருந்து 195-ஆக உயரும்.

அமித்ஷா

இதனால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாது. அதனால் தென் மாநிலங்களுக்கு அநீதி இல்லை. தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது என்று எழுத்துபூர்வமாக உறுதி அளிக்க தயாராக இருக்கிறோம். தொகுதிகளில் மக்கள்தொகை வேறுபாடு உள்ளதால் மறுவரையறை என்பது முக்கியம்" என்று பேசியிருக்கிறார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.