மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு; பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உருக்கமான வேண்டுகோள்..!
Seithipunal Tamil April 18, 2026 04:48 AM

தயவுசெய்து, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு தருமாறு பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மக்களவை நேற்று (16ஆம் தேதி) கூடியது.

அதன்படி, தொகுதி மறுவரையறை தொடர்பான 03 மசோதாக்களை மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மக்களவையில் தாக்கல் செய்தனர். இதனையடுத்து, குரல் வாக்கெடுப்பிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரிவு வாரியான வாக்கெடுப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. 

அதன் முடிவில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 03 மசோதாக்களை அறிமுகம் செய்வதற்கு எதிராக 185 வாக்குகளும், ஆதரவாக 251 வாக்குகளும் பதிவானது.

இந்நிலையில், திருத்தச் சட்டம் தவிர மற்ற இரு மசோதாக்களை விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளித்தார். சுமார் 12 மணிநேரம் நடந்த விவாதத்திற்குப் பிறகு, இன்று மாலை 04 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த சூழலில், 'பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக முடிவெடுத்து வாக்களிக்கும்படி அனைத்து அரசியல் கட்சிகளையும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இதனை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

'மகளிருக்கு அதிகாரம் கொடுக்கும் சட்டத் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று இரவு 1 மணி வரை இந்த விவாதம் நடைபெற்றது. தவறான புரிதல்களை நீக்கும் வகையிலும், சந்தேகங்களுக்கும் இந்த விவாதத்தில் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, தேவையான கூடுதல் தகவல்களும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த நான்கு தசாப்தங்களாக பெண்களுக்கான இடஒதுக்கீடு எனும் விவகாரத்தைச் சுற்றிப் பெருமளவிலான அரசியல் விளையாட்டுகள் அரங்கேறி வந்துள்ளன. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாகத் திகழும் பெண்களுக்கு, அவர்களுக்கான உரிமைகள் நிச்சயமாகக் கிடைக்க வேண்டிய தருணம் இது.

சுதந்திரம் பெற்றுப் பல தசாப்தங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, முடிவெடுக்கும் செயல்முறைகளில் இந்தியப் பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பிரதிநிதித்துவம் இருப்பது ஏற்புடையதல்ல. இன்னும் சற்று நேரத்தில், மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தயவுசெய்து, ஆலோசித்து, முழுமையான உணர்வுப்பூர்வமான அக்கறையுடன், பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக முடிவெடுத்து வாக்களிக்கும்படி அனைத்து அரசியல் கட்சிகளையும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இதனை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.