பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு தோல்வி; 'எதிர்க்கட்சிகள் செயல் கண்டிக்கத்தக்கது; கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்'; அமித்ஷா காட்டம்..!
Seithipunal Tamil April 18, 2026 06:48 AM

131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு ஆகிய மூன்று மசோதாக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விவாதிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து பேசிய நிலையில், மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாக்கு செலுத்தினர்.

மொத்தம் 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திய நிலையில், அதில், 278 உறுப்பினர்கள் 'ஆம்' என்று மசோதாவுக்கு ஆதரவும், 211 உறுப்பினர்கள் 'இல்லை' என்று எதிராகவும் வாக்களித்தனர். இதன் காரணமாக, மசோதாவை நிறைவேற்றுவதற்கான தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறாததால், இந்த மசோதா சபையில் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், ''பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அனுமதிக்கவில்லை. இந்த மசோதாவை நிராகரிப்பதும் அதனை ஒரு கொண்டாட்டமாக ஏற்றுக்கொண்டு அதன் மீது வெற்றிக் கோஷங்களை எழுப்புவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.