இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு தெருவிலும் ஏடிஎம் மெஷின் இறுகியது. இதில் சீனா–பாகிஸ்தான் எல்லையில் உலகின் மிகவும் உயரத்தில் இருக்கும் ஏடிஎம் குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகின் இந்த மிக உயரமான, வித்தியாசமான ஏடிஎம், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள உயரமான மலைப்பாதையான குஞ்செராப் கணவாயில் உள்ளது. இந்த ஏடிஎம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,693 மீட்டர் (15,397 அடி) உயரத்தில் உள்ளது. இத்தனை உயரத்தில் இருப்பதால், இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் உலகின் மிக உயரமான ஏடிஎம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயரத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும், வானிலையும் மிகவும் கடுமையாக இருக்கும். இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், இந்த ஏடிஎம் தொடர்ந்து இயங்கி கொண்டுதான் உள்ளது. அதாவது, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பணியாளர்கள் ஆகியோரின் வசதிக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் வழியாகப் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள், எல்லைப் பாதுகாப்புப் படையினர், வர்த்தகர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காகவே இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டது.
சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் ஒரு முக்கியமான சாலையில் இந்த ஏடிஎம் அமைந்துள்ளது. இங்கு வெப்பநிலை பெரும்பாலும் மைனஸ் டிகிரியில் இருக்கும். குளிர்காலத்தில் கடும் பனி, கடுங்குளிர் காரணமாக சாதாரண இயந்திரங்கள் வேலை செய்ய முடியாமல் போகும். இருந்தாலும் இந்த ஏடிஎம் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்க முயற்சி செய்கிறார்கள்.
குஞ்செராப் கணவாய், உலகின் மிக உயரமான தார் போடப்பட்ட சர்வதேச சாலைகளில் ஒன்றான புகழ்பெற்ற காரகோரம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் பயணிகளும் பணியாளர்களும் அடிக்கடி சென்று வருவதால் இந்த ஏடிஎம் அந்தத் தொலைதூரப் பகுதியில் அவர்களுக்கு வசதியான வங்கிச் சேவையை வழங்குகிறது.
இந்த ஏடிஎம் சூரிய ஆற்றலும் காற்று ஆற்றலும் வைத்து இயங்குகிறது. இவ்வளவு உயரமான இடத்தில் மின் கம்பங்களை அமைப்பது கிட்டத்தட்ட முடியாதது. அதனால் இந்த ஏடிஎம்-ஐ இயக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். பாகிஸ்தான் தேசிய வங்கி 2016-இல் இங்கு வங்கிச் சேவையைத் தொடங்கியது.