மீண்டும் திரிஷாவுடன் ரொமான்ஸ் செய்யப் போகும் சித்தார்த்… எகிறும் எதிர்பார்ப்பு!
CineReporters Tamil April 21, 2026 03:48 PM

தென்னிந்திய திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தற்போது நடிகர் சித்தார்த்துடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சித்தார்த் – த்ரிஷா ஜோடிக்கு என்றுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர்கள் திரையில் தோன்றும்போதெல்லாம் அந்தப் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இவர்கள் முதன்முதலில் 2004-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த படம் தோல்வி அடைந்தாலும் அந்தப் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து, 2005-ம் ஆண்டு நடிகர் பிரபுதேவா முதன்முதலாக இயக்குநராக அவதாரம் எடுத்த நுவ்வோஸ்தாண்டே நேனோதண்டானா என்ற தெலுங்கு படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்தது. திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட இப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்தது. இன்றுவரை தெலுங்கு சினிமாவின் கல்ட் கிளாசிக் காதல் படங்களில் ஒன்றாக இது கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றி, இருவருக்கும் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது. இந்த படம்தான் தமிழில் ஜெயம் ரவி, திரிஷா நடிப்பில் உனக்கும் எனக்கும் சம்திங் என்ற பெயரில் ரீமேக் ஆகி இங்கும் மிகபெரிய வெற்றியை பெற்றது.

இந்த பிளாக்பஸ்டர் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2 திரைப்படத்தில் சித்தார்த்தும் த்ரிஷாவும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகள் கழித்து சித்தார்த் மற்றும் த்ரிஷா ஜோடி மீண்டும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த புதிய திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் ஒருவர் பிரம்மாண்டமாக இயக்கவுள்ளதாகவும், இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.