நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் பிசிசிஐ எடுத்துள்ள ஒரு அதிரடி நடவடிக்கை, உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ள அதே வேளையில், அண்டை நாடான பாகிஸ்தானுக்கு கடும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் இறுதியில், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது.
இந்தப் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய மும்பை அணியின் அஸ்வினி குமாருக்கு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மீர்வைஸ் அஷ்ரப் விருது வழங்கி கௌரவித்தார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு வலுவாக இருப்பதை இந்தச் சம்பவம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஐபிஎல் போன்ற பிரம்மாண்ட மேடையில் ஆப்கான் கிரிக்கெட் தலைவருக்குக் கொடுக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் பாகிஸ்தானை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் கதவுகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் வீரர்களும் நிர்வாகிகளும் இந்தியாவில் கொண்டாடப்படுவது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “இந்தியா எப்போதுமே ஆப்கானிஸ்தானின் உண்மையான நண்பன்” என ஆப்கான் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.