குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்கள் மற்றும் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதைச் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடார், தனக்கு வாக்களிக்க அனுமதி கோரித் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 62(5)-ன் படி, சட்டப்பூர்வமான காவலில் இருப்பவர்களோ அல்லது தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களோ வாக்களிக்க உரிமையில்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்தச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றமே உறுதி செய்துள்ளதால், இதில் விதிவிலக்கு அளிக்க முடியாது எனக் கூறி ஹரிநாடாரின் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.