வாக்காளர்களே.. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி?.. முழு விவரம்!!
TV9 Tamil News April 22, 2026 05:48 PM

Tamilnadu Polls 2026: தமிழகத்தில் நாளை (ஏப்.23) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி, பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றை எளிதாகக் கண்டறியத் தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது.

வாக்குச்சாவடி விவரங்களை அறிவது எப்படி?

வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் (EPIC Number) பயன்படுத்தி கீழ்க்கண்ட வழிகளில் விவரங்களைப் பெறலாம். electoralsearch.eci.gov.in, ecinet.eci.gov.in, voters.eci.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: நாளை சட்டமன்ற தேர்தல்.. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!

அதோடு, ECINET, Votershelpline, மற்றும் Sweetha ஆகிய மொபைல் செயலிகள் வாயிலாகவும் விவரங்களைப் பெற முடியும். தற்போது வழங்கப்பட்டு வரும் வாக்காளர் தகவல் சீட்டில் (பூத் ஸ்லிப்) கியூ ஆர் கோடு (QR Code) வசதி உள்ளது. இதனை ஸ்கேன் செய்வதன் மூலமும் உங்கள் வாக்குச்சாவடியைத் துல்லியமாக அறியலாம்.

மேற்கூறிய தளங்களில் விவரங்களை பெற முடியாதவர்கள், 1950 என்ற எண்ணுக்கு உங்கள் EPIC எண்ணை SMS அனுப்புவதன் மூலமும் விவரங்களைப் பெறலாம்.

அடையாள ஆவணங்கள்:

வாக்களிக்கச் செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், கீழ்க்கண்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் வங்கி அல்லது தபால் நிலையத்தின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள்.

வரிசை எண் (Slit/Serial Number):

பூத் ஸ்லிப் இல்லையென்றாலும், ஆன்லைனில் கண்டறிந்த உங்கள் பாகம் எண் (Part No) மற்றும் வரிசை எண்ணை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டு சென்றால், வாக்குச் சாவடியில் உள்ள முகவர்கள் உங்கள் பெயரை விரைவாகக் கண்டறிய உதவியாக இருக்கும்.

புதிய மாற்றங்கள் மற்றும் விதிமுறைகள்:

இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகே அவரது வண்ணப் புகைப்படமும் இடம்பெற்றிருக்கும். வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கத் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு, அதற்குத் டோக்கன் வழங்கப்படும்.

தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் மட்டுமின்றி, மின்வாரியம், போக்குவரத்து, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதாரத்துறை போன்ற அத்தியாவசியப் பணிகளில் உள்ளவர்களுக்கும் தபால் வாக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: முதல்முறை வாக்காளர்களே தயார் தானா? – வாக்குச் சாவடியில் நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேர்தல் புள்ளிவிவரங்கள்:

மொத்த தொகுதிகள்: 234

மொத்த வேட்பாளர்கள்: 4,023 (ஆண்கள்: 3,579; பெண்கள்: 443; மூன்றாம் பாலினத்தவர்: 1)

மொத்த வாக்காளர்கள்: 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும் நாளை தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.