இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!
Seithipunal Tamil April 23, 2026 01:48 AM

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 க்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. அதன்படி இந்த சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 04 லட்சத்து 18 ஆயிரத்து 541 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது;

தமிழ்நாட்டில் 05 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும், 234 தொகுதிகளைச் சேர்த்து, 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்கள் இருப்பதாகவும், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். அத்துடன், 83 ஆயிரத்து 875 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாகவும், 300 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் ஆயிரத்து 262 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் செல்போன்களை வாக்குச்சாவடி மையத்திற்கு எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்றும், வெளியை வைத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.