தமிழக சட்டமன்ற தேர்தலின் மிக முக்கிய நிகழ்வாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் திரண்டதால் நீலாங்கரை பகுதியே ஸ்தம்பித்தது.
தனது இல்லத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு விஜய் புறப்பட்டபோது, ரசிகர்கள் அவரது வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். "டிவிகே... டிவிகே..." மற்றும் "தளபதி" என முழக்கமிட்டு தொண்டர்கள் உற்சாகம் பொங்க கோஷமிட்டனர்.
கட்டுக்கடங்காத இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடிகர் விஜய் வாக்களிப்பதை உறுதி செய்யவும் அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தகுந்த போலீஸ் பாதுகாப்போடு வாக்குச்சாவடிக்குள் சென்ற விஜய், வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அரசியலில் அதிகாரப்பூர்வமாக களம் கண்டுள்ள விஜய், கட்சி ஆரம்பித்த பின்னர் தனது முதல் தேர்தலில் நீலாங்கரையில் வாக்கு செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வாக்களித்த பின் மை வைக்கப்பட்ட விரலை காட்டி ரசிகர்களுக்கு அவர் வணக்கம் தெரிவித்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விஜய்யின் வருகை அந்த பகுதியில் ஒரு தேர்தல் திருவிழாவையே ஏற்படுத்தியது.
Edited by Siva