தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முக்கிய நிகழ்வாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது மகள் சௌந்தர்யாவுடன் வந்து இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த அவர், தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். தலைவர் வருவதை அறிந்த ரசிகர்கள், அதிகாலையிலேயே அங்கு திரண்டு ‘தலைவா ஐ லவ் யூ’ என விண்ணதிர கோஷமிட்டு அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாக்களிப்பது நமது ஒவ்வொருவருடைய கடமை. மக்கள் அனைவரும் தவறாமல் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்” என அன்போடு அறிவுறுத்தினார். ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், போலீசார் பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்றனர். ரஜினி வாக்களித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இப்போது இணையத்தில் ‘டாப் ட்ரெண்டிங்’ ஆகி வருகின்றன.