விறுவிறுப்பான தொடக்கம்.. தமிழகத்தில் காலை 9 மணி வரை 17.69 சதவீத வாக்குகள் பதிவு..
TV9 Tamil News April 23, 2026 02:48 PM

Tamil Nadu Election Poll Percentage : தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 17.69% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்துக்குள் 5ல் ஒரு பங்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 6.30 மணியளவில் இருந்தே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக வெயிலுக்கு முன்பே தங்களது வாக்குகளை செலுத்த முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!

ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்:

வாக்குப்பதிவு தொடங்கிய முதல் சில மணி நேரங்களிலேயே முக்கியப் பிரபலங்கள் பலர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

அமைதியான முறையில் வாக்குப்பதிவு:

தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் போன்ற சில இடங்களில் நள்ளிரவில் நிலவிய போக்குவரத்து நெரிசல் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது மக்கள் சீரான முறையில் தங்களது ஊர்களுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

கிளாம்பக்கத்தில் தவித்த பயணிகள்:

முன்னதாக, தேர்தலையொட்டி சென்னையில் தங்கியிருந்து பணிபுரியும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று இரவு முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவியத் தொடங்கினர். ஆனால், நள்ளிரவைத் தாண்டியும் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், சிறுவர்கள் மற்றும் முதியவர்களுடன் வந்திருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேற்குவங்க தேர்தல் நிலவரம்:

மேற்கு வங்கத்திலும் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அங்கு 9 மணி வரை 18.8% வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத் தேர்தலின் முழுமையான முடிவுகள் வரும் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

2021 vs 2026 தேர்தல் ஒப்பீடு:

அதேபோல், இந்த தேர்தலில் 9 மணி நிலவரப்படி, பதிவாகியுள்ள வாக்குகளை, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பீடும் போது, 13.80% வாக்குகளே அப்போது பதிவாகியிருந்தது குறிப்பிடதக்கது. குறிப்பாக எஸ்ஐஆர் பணிகள் காரணமாக இந்த வித்தியாசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Tamil Nadu Election 2026 LIVE: தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா.. வாக்குப்பதிவு விறுவிறுப்பு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.