காலை 6.54 மணிக்கு பதிவான தமிழ்நாட்டின் முதல் ஓட்டு.. அஜித் ஓட்டு போட்டார்.. முக்கிய புள்ளிகளின் ஓட்டு..!
Webdunia Tamil April 23, 2026 12:48 PM

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே மாநிலம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. ஜனநாயக கடமையை ஆற்ற அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் சாமானிய மக்கள் என அனைத்துத் தரப்பினரும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் வாக்களித்தார். அதேபோல், ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரும், அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிற்றரசுவும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

அமைச்சர்கள் எஸ். ரகுபதி திருமயத்திலும், கீதா ஜீவன் தூத்துக்குடியிலும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திரைத்துறையைச் சேர்ந்த குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியினர் சென்னை மந்தைவெளியில் வாக்களித்தனர். அரசியல் தலைவர்களுக்கு இணையாகப் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். குறிப்பாக, 94 வயது மூதாட்டி ஒருவர் முதிர்ந்த வயதிலும் சற்றும் சோர்வின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

நடிகர் அஜித் காலை 6.54 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். தமிழகத்தின் முதல் வாக்காக அஜித்தின் வாக்கு கருதப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.