விசில் சின்னத்துக்கு ஓட்டு.. பேஸ் புக்கில் போஸ்ட்… தவெக ஆதரவாளருக்கு போலீஸ் ரிவிட்டு!
TV9 Tamil News April 23, 2026 05:48 PM

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, வாக்குகளை பதிவு செய்ய வரும் வாக்காளர்கள், தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் காலை முதல் ஏராளமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில், ஒரு இளைஞர் தனது வாக்கை பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அவரது ஆவணங்களை பரிசோதனை செய்த தேர்தல் அலுவலர் வாக்களிப்பதற்கு அனுமதி அளித்திருந்தார்.

தவெகவுக்கு வாக்களித்ததை வீடியோ எடுத்த நபர்

அதன்படி, அந்த இளைஞர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்துக்கு வாக்களிப்பதை தனது செல்போன் மூலமாக வீடியோவாக பதிவு செய்து அதனை வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்ததும் தனது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ, வைரலாக பரவி வந்த நிலையில், இது குறித்த புகார் தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனத்திற்கு சென்றதாக தெரிகிறது. அதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின் பேரில், போலீசார் விசாரணையை தொடங்கினர்.

தவெக ஆதரவாளரை கைது செய்த போலீசார்

இதில், அந்த வீடியோவை பதிவு செய்தவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் சக்திவேல் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரது வாக்குச்சாவடி விவரங்களின் மூலம் வீட்டு முகவரியை கண்டுபிடித்த போலீசார், அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று சக்திவேலை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்கு அளித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கம் செய்துள்ளனர்.

வாக்குச்சாவடிக்குள் செல்போன் உபயோகிக்கூடாது

வாக்குச்சாவடி மையத்துக்குள் வாக்காளர்கள் உள்ளிட்டோர் செல்போன்களை கொண்டு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, வாக்களிக்க வரும் வாக்காளர்களின் செல்போன்களை தேர்தல் அலுவலர்கள் பெற்றுக் கொண்டு அதற்கான டோக்கனை வழங்கி பாதுகாப்பான முறையில் வைக்கின்றனர். வாக்களித்துவிட்டு தங்களது செல்போனை பெற்று செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் அலுவலர்களுக்கு தெரியாமல் தவெக ஆதரவாளர் சக்திவேல் செல்போனை மறைத்து வாக்குச்சாவடிக்குள் எடுத்து சென்றதும், வீடியோ பதிவு செய்ததும் குற்றம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.