15 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்... விடிய விடிய திணறிய நெடுஞ்சாலை... தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்த மக்கள்!
Dinamaalai May 01, 2026 10:48 AM

தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், மே தினமான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சனி மற்றும் ஞாயிறு எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் பேருந்துகள் மற்றும் கார்களில் தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கத் தொடங்கியதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

காட்டாங்கொளத்தூரில் தொடங்கி மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி வழியாகப் பரனூர் சுங்கச்சாவடி வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் விடிய விடிய நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்து சென்றன. இதனால் இருசக்கர வாகனங்கள் முதல் ஆம்னி பேருந்துகள் வரை அனைத்தும் நெரிசலில் சிக்கின. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நகர முடியாமல் பயணிகள் தவித்தனர். 

இன்று வெள்ளி முதல் ஞாயிறு வரை தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்தனர். பள்ளித் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பம் குடும்பமாக மக்கள் வெளியூர் சென்றனர். மேலும் இன்று சித்ரா பௌர்ணமி என்பதால் திருவண்ணாமலை கிரிவலத்திற்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விடக் கூடுதலாக இருந்ததால், வாகனங்கள் அதிகளவில் சென்னையை விட்டு வெளியேறியது. 

வாகனங்களின் எண்ணிக்கை வினாடிக்கு வினாடி அதிகரித்ததால் சென்னையின் புறநகர் பகுதிகளில் துவங்கி திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் சுமார் 15 மீட்டர் தூரம் வரையில் வாகனங்கள் வரிசையாக காத்திருந்து ஊர்ந்து சென்றன. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.