காசிக்கு நிகரான தலங்கள் நம் நாட்டில் அநேகம் உள்ளன. அதிலும் ஆயுள் விருத்தி தலம் என்றால் திருக்கடவூர், திருவாரூர் போன்ற தலங்களைச் சொல்லலாம். இவற்றுள் மிகவும் முக்கியமான ஒரு தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்கு ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதராக ஈசன் அருள்பாலிக்கும் திருத்தலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து 28 கி.மீ., திருவாரூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கிறது ஸ்ரீவாஞ்சியம். பித்ருக்களுக்கான விசேஷ பரிகாரத் தலம் என்பதால் இங்கு ஒரு அமாவாசைக்குத் தர்ப்பணம் செய்தால், 10 ஆண்டுகளுக்கு உங்கள் பித்ருக்கள் திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதிகம். வாருங்கள் அத்தல மகிமைகளைக் காண்போம்.
ஸ்கந்த புராணம், பிரமாண்ட புராணம், ஸாம்போப புராணம் போன்றவை போற்றும் தலமாகத் திகழ்கிறது ஸ்ரீவாஞ்சியம். மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய நால்வரும் பாடிய அற்புதத் தலமிது. நான்கு யுகங்களிலும் நிலைத்து நிற்கும் தலமிது. பிரளயத்தின்போது அக்னி வடிவாகவும், கிருதயுகத்தில் பொன்னாகவும், திரேதாயுகத்தில் வெள்ளியாகவும், துவாபரயுகத்தில் தாமிரமாகவும் விளங்கிய ஸ்ரீவாஞ்சியம் கோயில், கலியுகத்தில் கலியின் தோஷம் காரணமாக சுதைக் கோயிலாகத் திகழ்வதாகக் கூறப்படுகிறது. படைக்கும் தொழிலை பிரம்மனுக்கு ஈசன் அளித்த தலம் இது. `ஸ்ரீ’ எனும் திருமகளை வாஞ்சையோடு அடைய, திருமால் தவம் இருந்த தலம் என்பதால் இது ‘ஸ்ரீவாஞ்சியம்’ என்றானதாம்.
முற்காலத்தில் சந்தன மரங்கள் அடர்ந்து காணப்பட்ட தலம் ஆதலாம் வடமொழியில் ‘கந்தாரண்ய ஷேத்திரம்’ எனப்பட்டது. இதனால் ஈசனும் ‘கந்தாரண்யேஸ்வரர்’ என்று போற்றப்பட்டார். தலவிருட்சம் சந்தன மரம்.
மாசி மாத, சுக்ல பட்ச, மக நட்சத்திர சுப நாளில், ஈசன் உமையோடு இங்கு எழுந்தருளியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இங்கே ஈசன் மங்களாம்பிகையுடன் அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு பேறுகளையும் வழங்கும் அருள் வள்ளலாக விளங்குகிறார். ஸ்ரீவாஞ்சிநாதர் சுயம்புத் திருமேனி. நான்கு யுகங்களிலும் நிலைத்திருக்கும் அதிசய திருமேனி. அம்பிகை `வாழ வந்த நாயகி’, `மருவார் குழலம்மை’ என்றெல்லாம் போற்றப்படுகிறாள். மாலையில் வெண்பட்டு உடுத்தி, சரஸ்வதியின் அம்சமாகவும் வணங்கப்படுகிறாள். மங்கலங்கள் யாவும் அருளும் கருணை நாயகி இவர்.
ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயில்
ராஜகோபுரம் தாண்டியதும் தென்திசையில் அருள்கிறார் யமதர்மர். தமிழகத்தில் மிகப் பழைமையான யமதர்ம சந்நிதி இதுவே என்கிறார்கள். தென்திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்தால் யம பயம் விலகும்; ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. இங்கு இவர் ஆயுள் அனுக்கிரக மூர்த்தி. அருகிலேயே சித்ரகுப்தனும் அருள்கிறார்.
யமன் தனக்கு உண்டான தோஷம் தீர இத்தலத்தில் `தீர்த்தம்' உருவாக்கி ஈசனைத் தொழுதான். அதுவே தற்போது யமதீர்த்தம் எனப்படுகிறது. மேலும், இந்த ஆலயத்தில் நவகிரகங்கள் செய்யும் பணிகளையும் யமதர்மனே செய்கிறார். இதனால் யமனை இங்கே வழிபட வழிபட நவகிரக தோஷங்கள் யாவும் விலகும்.
தல தீர்த்தம் குப்த கங்கை, யம தீர்த்தம் உள்ளிட்ட 23 தீர்த்தங்கள் இங்கிருக்கின்றன. கங்கையே விரும்பி உறையும் குப்த கங்கைக் கரையில், கங்கைக் கரை விநாயகர் தொடங்கி, அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், சந்திர மௌலீஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், மகாலட்சுமி என எண்ணற்ற சந்நிதிகளும் தெய்வ வடிவங்களும்கொண்ட பிரமாண்ட ஆலயமிது.
இங்கு யோக பைரவர் மேற்குப் பார்த்து யோக நிலையில் அருள்கிறார். இவருக்கு நாய் வாகனம் இல்லை. நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீர நெய் வடை மாலை சார்த்தி அபிஷேகம் செய்வது சிறந்த பரிகாரமாகச் சொல்லப்படுகிறது.
மாசி மக உற்சவத்தில் இரண்டாம் நாள், பரணி நட்சத்திர நாளில் வாஞ்சிநாதர் யம வாகனத்தில் புறப்பட்டு, யம தீர்த்தம் சென்று தீர்த்தவாரி கொடுப்பார். இதை தரிசிப்பவர் யம பயம் இன்றி வாழ்வர் என்பது நம்பிக்கை.
இங்கிருக்கும் வெண்ணெய் பிள்ளையாரை வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு வேண்டிக்கொண்டால் நலம் பெறலாமாம். குணமான பிறகு இவரது திருமேனியில் வெண்ணெய் தடவி, பிரார்த்தனையை நிறைவேற்றலாம் என்பதும் விசேஷம்.
துர்காதேவி இங்கே மகிஷாசுரமர்த்தினியாக எட்டுக் கரங்களுடன் இருக்கிறார். இந்த தேவியை வழிபட்டால் பயங்கள் விலகுகின்றன. எதிர்களின் தொல்லைகள் முற்றிலும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள்.
இந்தத் தலத்திலுள்ள மிகப் பெரிய விசேஷம் ராகுவும் கேதுவும் தனித்தனியே இல்லாமல் ஒரே உடலுடன் இங்கு அருள் பாலிப்பதே. அமுதம் உண்டு, சிரஞ்சீவி தன்மைகொண்ட இந்த இருவரும் இங்கே ஈசன் அருளால் ஓர் உருவாகி `சண்டராகு' என்றாகினர். இவர்களை வணங்க நீண்ட ஆயுளும், நிறைவான ஆரோக்கியமும் அடைவர் என்பதும் நம்பிக்கை. இந்தத் தலம் ராகு, கேது பரிகாரத் தலமாகவும் இருக்கிறது.
இங்கு வந்து இலுப்பை எண்ணெயில், தாமரை நூல் திரி போட்டு தீபமேற்றி, வார சூனிய பரிகார பூஜை செய்தால் எதிரிகள் தொல்லை தீரும் என்கிறார்கள். மேலும், இங்கிருக்கும் ஈசனை வழிபட்டால் காரியத்தடை நிவர்த்தி, பிதுர் தோஷ நிவர்த்தி, திருமணத்தடை நிவர்த்தி உண்டாகும். இங்கு வந்து வழிபட்ட அதேநாளில் சிதலபதி ஆதி விநாயகர் கோயிலுக்கும், திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கும் சென்று வணங்க வேண்டும் என்பதும் ஒரு நம்பிக்கை.
இந்த அற்புதமான ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.!