விமானப் பயணத்தின் போது காணாமல் போன ரஷ்ய இயக்குனரின் ஆஸ்கார் சிலையால் பரபரப்பு..!
Seithipunal Tamil May 02, 2026 01:48 PM

"மிஸ்டர் நோபடி எகைன்ஸ்ட் புட்டின்" (Mr. Nobody Against Putin) என்ற ஆவணப்படத்திற்காக இந்த ஆண்டுக்கான (2026) ஆஸ்கார் விருதினை ரஷ்ய இயக்குனர் பாவெல் தாலன்கின் வென்றார். விமானப் பயணத்தின் போது குறித்த ஆஸ்கார் சிலை காணாமல் போயுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாவெல் தாலன்கின் நியூயோர்க்கிலிருந்து ஜெர்மனிக்குச் சென்றுள்ளார். அப்போது அமெரிக்கப் விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள்  சிலையை விமானத்தின் கேபினுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

அதாவது குறித்த ஆஸ்கார் சிலை சுமார் 3.8 கிலோ எடை கொண்டது. அந்தச் சிலையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறி, அதை விமானத்தின் சரக்குப் பெட்டிக்கு மாற்றும்படி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அந்தச் சிலையைப் விமான பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு பெட்டியில் வைத்து விமானத்தின் அடிப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இயக்குனர் தாலன்கின் இறங்கியுள்ளார். அப்போது அவருடை  ஆஸ்கார் சிலை உள்ள பெட்டி அவரிடம் வந்து சேரவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில்; தனது முந்தைய பயணங்களில் எப்போதுமே இந்தச் சிலையைக் கையில் வைத்தே பயணம் செய்திருப்பதாகவும், தற்போது அதிகாரிகள் இதை ஒரு ஆயுதமாகக் கருதியது தனக்குப் புரியாத புதிராக இருப்பதாகவும் தாலன்கின் வேதனையாக கூறியுள்ளார்.

இந்நிலையில், லுஃப்தான்சா விமான நிறுவனம் இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், மாயமான ஆஸ்கார்  சிலையைத் தேடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இயக்குனர் தாலன்கின், ரஷ்யப் பாடசாலைகளில் போருக்கு ஆதரவான கருத்துக்கள் எவ்வாறு மாணவர்களிடையே திணிக்கப்படுகின்றன என்பதை மையமாக வைத்து இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளார்.

இவர் கடந்த 2024-இல் ரஷ்யாவிலிருந்து வெளியேறிய நிலையில், தற்போது தனது படைப்பிற்காகப் பெற்ற உயரிய விருதான ஆஸ்காரின் சிலை விமான பயணத்தில் காணாமல் போயுள்ளதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.