கடந்த 05 ஆண்டுகளாக உக்ரைன் போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான டுவாப்ஸ் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு பின்னர் இந்த டுவாப்ஸ் துறைமுகம் இலக்கு வைக்கப்படுவது இது நான்காவது முறையாகும். இந்தத் தாக்குதல்களால் ரஷ்யாவின் எரிசக்தி உற்பத்தித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
எண்ணெய் சுத்திகரிப்பு நியாயத்தில் ஏற்பட்ட தீ காரணமாக கடல் மட்டத்தில் எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டுள்ளது.இதனால் இப்பகுதியில் உள்ள கடற்கரைகள் மாசடைந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் டுவாப்ஸ் நகரில் அவசரநிலை அமலில் உள்ளது. கடற்கரை ஓரங்களில் கசிந்துள்ள சுமார் 13,300 கன மீட்டர் எரிபொருள் மற்றும் மாசுபட்ட மண்ணை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் இடம்பெறுவதால், பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், குழாய் நீரைக் குடிக்க வேண்டாம் என்றும், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்துமாறும் உள்ளூர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேப்போன்று நேற்று மே தின விடுமுறை தினத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல்கள் குறித்து உள்ளூர் மக்கள், சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதாவது மாஸ்கோவில் உள்ள மத்திய அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இந்த நிலைக்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளை கடந்தும் இன்னும் போர் முடிவுக்கு வராத சூழலில், ரஷ்யா உக்ரைனின் மின் நிலையங்களைத் தாக்கி வருகிறது. இதற்கு பதிலடியாக உக்ரைன், ரஷ்யாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் எரிசக்தித் தளங்களைத் தாக்கி வருகிறது.
டுவாப்ஸ் துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் பாதிப்புகள் இப்பகுதியின் எதிர்காலத்தையும், மக்களின் சுகாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.