ஈரான் மீது எப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை துவங்கியதோ அப்போது முதலே
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட துவங்கியது. அதற்கு காரணம் வளைகுடா நாடுகளில் இருந்துதான் பெருமளவு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால் கச்சா எண்ணெய் கப்பல்கள் வரும் ஹார்மோஸ் கடல் வழிப்பாதையை ஈரான் மூடிவிட்டது. இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் பல ஹோட்டல்கள் மூடப்பட்டது. பல ஹோட்டல்களில் விறகு அடுப்புகள் பயன்படுத்த தொடங்கினார்கள்..
கடந்த மூன்று மாதங்களில் பலமுறை வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. நேற்று திடீரென வணிக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது. இது ஹோட்டல் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்நிலையில் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் தமிழ்நாட்டில் விடுதி கட்டணங்கள் உயர்கிறது. விடுதிகளில் இருக்கும் கூடுதல் வசதிகளை பொறுத்து கட்டணங்களில் மாற்றம் இருக்கக்கூடும் எனவும், பொருளாதார சூழலை புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வருகிற 5ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் ஐடி விடுதிகள் மற்றும் பி.ஜி உரிமையாளர்கள் சங்கம் கூறியிருக்கிறது..
சென்னை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் பலரும் பிஜி ஹாஸ்டலில் தங்கியிருக்கிறார்கள். அங்கு 3 வேளை உணவு கொடுக்கப்படும். கேஸ் அதிரடி விலை உயர்வால் தற்போது அவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.