ஆத்தூர் அருகிலுள்ள தாண்டவராயபுரம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகள் சந்திரலேகா (29), உயர்கல்வியாக எம்.எஸ்.சி., பி.எட். முடித்திருந்தார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் இளங்கோநகரைச் சேர்ந்த ராஜதுரை (31) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சந்திரலேகா தனது வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். திருமணமாகி 6 ஆண்டுகள் கடந்துள்ளதால், உதவி கலெக்டர் தமிழ்மணி தலைமையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், சந்திரலேகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதற்கிடையில், சந்திரலேகாவின் பெற்றோர் தரப்பில் ஆத்தூர் காவலர்களிடம் பரபரப்பான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்படுவதாவது: சந்திரலேகாவும் ராஜதுரையும் வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் செய்தபோதிலும், திருமணத்தின் போது 8 பவுன் நகையும், ரூ.2 லட்சம் பணமும் சீர்வரிசையாக வழங்கியிருந்தோம்.திருமணத்திற்குப் பிறகு அவர்கள் பல இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
சில நாட்களில் ராஜதுரைக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது, மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது தெரியவந்ததும் குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியது. மேலும், சந்திரலேகாவுக்கு மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சாதி வேறுபாட்டை முன்வைத்து அவளுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைகள் செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட மனவேதனையால் தான் அவர்களின் மகள் உயிரிழந்ததாகவும், இந்த மரணத்திற்கு ராஜதுரை பொறுப்பு என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.