ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம்பாளையம் பகுதியில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாகத் தொடுக்கப்பட்ட புகாரில், முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிருஷ்ணம்பாளையம், ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (51). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியிடம் தவறான எண்ணத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இச்சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், முதியவர் கண்ணனைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிறுமிக்குத் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுவர், சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அந்நிய நபர்களிடம் பழகும் விதம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாகக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.