தர்பூசணி மரண வழக்கில் திடீர் திருப்பம்... உயிரிழப்புக்கு பழம் காரணமல்ல!
Dinamaalai May 02, 2026 07:48 PM

மும்பையில் தர்பூசணி பழம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தர்பூசணியில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதிகப்படியான ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கை வழக்கை வேறு திசைக்கு மாற்றியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், அவர்களின் உடலில் 'மார்ஃபின்' (Morphine) என்ற சக்திவாய்ந்த மருந்து அதிக அளவில் கலந்திருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

மார்ஃபின் என்பது பொதுவாக மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்குப் பின் கடுமையான வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. இது ஓபியம் (Opium) வகையைச் சார்ந்தது. இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனையின்றி அதிக அளவில் உட்கொண்டால், அது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி மரணத்திற்கு வழிவகுக்கும்.

இதன் மூலம், அந்த குடும்பத்தினர் சாப்பிட்ட தர்பூசணி பழம் இயற்கையான முறையில் மரணத்தை ஏற்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அந்தப் பழத்தில் யாராவது திட்டமிட்டு இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்தினார்களா? அல்லது குடும்ப உறுப்பினர்களே வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த மருந்தை உட்கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் மட்டுமே கட்டுப்பாட்டுடன் கையாளப்படும் 'மார்ஃபின்' மருந்து, ஒரு சாதாரண குடும்பத்திற்கு எப்படி கிடைத்தது என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய கேள்விக்குறி. உயிரிழந்தவர்களின் வீட்டைச் சோதனையிட்ட போலீசார், அங்கிருந்து சில மருந்து பாட்டில்களைக் கைப்பற்றியுள்ளனர். இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் அல்லது யாராவது உணவில் விஷம் (மருந்து) கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.