திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே மூலிகை பறிக்கச் சென்ற தொழிலாளர்கள் பயணித்த மினி லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த சிறுவன் உட்பட 8 பேர் உடல் நசுங்கிப் படுகாயமடைந்தனர். மேலப்பாண்டி மற்றும் அவரிக்காடு பகுதியைச் சேர்ந்த வேணி, சுமதி, அஜித்தா, பரிமளா உள்ளிட்ட தொழிலாளர்கள் கேரளாவைச் சேர்ந்த நாசர் என்பவருக்குச் சொந்தமான வாகனத்தில் சென்றபோது பின்னத்தூர் வளைவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்தவுடன் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், எடையூர் போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மினி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததா அல்லது வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையே விபத்து குறித்துத் தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். படுகாயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்த அவர், உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். இந்த விபத்துச் சம்பவம் முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.