ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தி.மு.க தரப்பில் நல்லசிவம், அ.தி.மு.க தரப்பில் பிரபு, த.வெ.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ செங்கோட்டையன் ஆகியோர் களம் கண்டனர். கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் நீண்ட கால உறுப்பினராக செங்கோட்டையன் பதவி வகித்து வந்தாலும், இரட்டை இலை சின்னத்தில் இருந்து மாறி விசில் சின்னத்தில் போட்டியிடுவது அவருக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், எந்தவித சந்தேகமும் இல்லாமல் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தொடர்ந்து 5-வது முறையாக இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடுவேன் என தீர்க்கமாகச் சொல்லி வந்தார் செங்கோட்டையன்.
செங்கோட்டையன்சொல்லி வைத்தார்போல் இந்த தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 10- வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தொடர்ந்து 5 -வது முறையாக வாகை சூடியிருக்கிறார். செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க வேட்பாளர் பிரபுவுக்கும் இடையே நடக்கும் கடும் போட்டி தி.மு.க வேட்பாளர் நல்லசிவத்திற்கு பெரிய அளவில் தேர்தல் வெற்றிக்கு பலன் கொடுக்கும் என தி.மு.க-வினர் கணக்கு போட்டு வைத்திருந்த நிலையில், 13,046 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று அந்தக் கணக்கையெல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார் செங்கோட்டையன்.