Kerala CM Race: கேரளாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸில் அதிகாரத்துக்கு மல்லுகட்டு!
சுகுமாறன் May 06, 2026 07:44 PM

மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய 3 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் உருவாகியுள்ளது.

கேரள முதலமைச்சர் யார்?

102 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை காங்கிரஸ் உறுதி செய்துள்ளது. இதனால், அந்த மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர் பொறுப்பேற்க உள்ளார். அந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.  அந்த போட்டியில் 3 பேர் உள்ளனர். விடி சதீஷன், ரமேஷ் சென்னிதலா, கேசி வேணுகோபால்  ஆகியோர் உள்ளனர்.

1.விடி சதீஷன்:

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் முதல் ஆளாக இருப்பவர் விடி சதீஷன். 2021ம் ஆண்டு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவர். கடந்த மக்களவைத் தேர்தலில் இவரது தலைமையில் காங்கிரஸ் கேரளாவில் 20க்கு 18 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. கடந்தாண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு சதீஷனின் பங்கு முக்கியமானது. கேரளாவின் திரிககரா, புதுபள்ளி, நீலாம்பூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர். 

2. ரமேஷ் சென்னிதலா:

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சதீஷனுக்கு சவால் தரும் நபராக இருப்பவர் ரமேஷ் சென்னிதலா. கேரள காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர். மக்களவையிலும், சட்டமன்றத்திலும் நீண்ட அனுபவம் கொண்டவர். 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவர். உம்மன் சாண்டியுடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 

3. கேசி வேணுகோபால்:

அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆவார். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடுகளில் வியூகம் வகுத்ததில் கேசி வேணுகோபாலின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமையுடன் நெருக்கமான உறவு கொண்டவர். அவர் தற்போது ஆலப்புழா மக்களவை உறுப்பினராக உள்ளார். அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஒரு வேளை அவரை முதலமைச்சராக காங்கிரஸ் தேர்வு செய்தால் அடுத்த 6 மாதத்திற்குள் அவர் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றாக வேண்டும். இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ யாரேனும் பதவி விலக வேண்டும்.

கேசி வேணுகோபால் முதலமைச்சராக தேர்வானால் அவர் எம்எல்ஏ -வாக வெற்றி பெற வேண்டும். அதேசமயம் அவர் எம்பி பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், இரண்டு இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகும்.

இதனால், சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே போட்டி நிலவும். இருவரில் ராகுல்காந்தி யாரைத் தேர்வு செய்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Vijay Swearing In: ’’உங்க விஜய்.. நா வந்துட்டேன்..’’ மே 7 காலை 11.30-க்கு முதல்வராகும் தவெக தலைவர்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.