’250 கோடி ரூபாய் Fees’ திமுக தோல்விக்கு காரணமான 2 நிறுவனங்கள்..!
அரூபி May 06, 2026 07:44 PM

திராவிட முன்னேற்றக் கழகம் இந்த சட்டமன்ற தேர்தலில் இப்படி படுத்தோல்வி அடையும் என்று யாருமே நினைக்கவில்லை. ஆனால், இப்படியான தோல்வியை அந்த கட்சிப் பெற முக்கிய காரணம் தொண்டர்களோ, நிர்வாகிகளோ அல்ல. திமுக தலைமை நம்பிய இரண்டு முக்கிய நிறுவனங்கள்.

தோல்விக்கு காரணமான வியூக நிறுவனங்கள்

கிளைக் கழகம் வரை வேரூன்றி, மிகப் பெரிய கட்டமைப்போடும், தொண்டர்கள் பலத்தோடும் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத ஆலரமாக இருக்கும் திமுக, களத்தில் பணியாற்றும் நிர்வாகிகளையும், ஒரு டீ கொடுத்துவிட்டு ஒரு நாள் முழுக்க கட்சிக்காக பாடுபடும் உடன்பிறப்பையும் நம்புவதை விடுத்து, தேர்தல் வியூக வகுப்பு நிறுவனங்களை முழுமையாக நம்பி, தேர்தல் வேலைகளை பார்க்கச் சொன்னதுதான் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

திமுகவிற்கு குழி பறித்த ஐபேக் மற்றும் ஷோ டைம்

குறிப்பாக, ஐ-பேக், ஷோ-டைம் என்ற இந்த இரண்டு தேர்தல் வியூக வகுப்பு நிறுவனங்கள் திமுகவிற்காக தேர்தல் பணிகளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டன. அப்போதே, கட்சி மட்டத்தில் இதற்கு கடும் அதிருப்தி எழுந்தது. ஆனால், 2வது முறை தொடர்ந்து வெற்றி பெற்று, வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்த திமுக தலைமை, அந்த பொறுப்பை இந்த இரண்டு வியூக வகுப்பு நிறுவனங்களை நம்பி ஒப்படைத்தது. அதன் விளைவுதான்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே அவரது சொந்த தொகுதியில் தோற்றது.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி சாத்தியப்பட்டது எப்படி ?

2021 சட்டமன்ற வெற்றிக்கு பின்னர் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது. அப்போது இப்படியான எந்த வியூக வகுப்பு நிறுவனங்களும் திமுகவிற்காக பணியாற்றவில்லை. அப்போது திமுகவிற்காக கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து பணியாற்றியது, இப்போது விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும் திமுகவின் PEN நிறுவனம் மட்டும்தான். அந்த தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் இமாலய வெற்றி பெற்றது. அந்த வெற்றிதான் மு.க.ஸ்டாலினை இந்திய அளவில் மிகப்பெரிய ஆளுமையாக காட்டியது. இந்தியா கூட்டணிக்கே மு.க.ஸ்டாலின் தலைமைத் தாங்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியதும் அந்த வெற்றியைத் தொடர்ந்துதான்.

வியூக நிறுவனங்களை நம்பி சோடைபோன திமுக

அதேபோல, 2026 தேர்தலையும் சந்திக்க, தொடக்கத்தில் திமுக முடிவுச் செய்திருந்த நிலையில், திமுக தலைமைக்கு நெருக்கமான சிலரின் அழுத்தத்தால் உள்ளே கொண்டுவரப்பட்டதுதான் ஐ – பேக் மற்றும் ஷோ டைம் என்ற இந்த இரண்டு நிறுவனங்கள். தொடக்கத்தில் ஐ-பேக்கோடு மட்டுமே ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், ஷோ டைம் நிறுவனத்தோடு அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்ததும் எவ்வளவு செலவானாலும் பராவாயில்லை ’அவர்களையும் இழுத்துப் போடு’ கணக்காய் உள்ளே வந்தவர்தான் அந்த நிறுவனத்தின் ராபின்ஷர்மா. தங்களுக்கு டிமாண்ட் ஏறுகிறது என்பதை அறிந்துகொண்ட இந்த இரண்டு நிறுவனங்களும் எக்கச்சக்கமாய் தங்கள் பணிக்கான தொகையை ஏற்றின. வெற்றியை மட்டுமே சிந்தித்த திமுக, அதற்கும் ஒத்துக்கொண்டது.

PEN நிறுவனத்தையே கட்டுக்குள் கொண்டுவந்த ஐபேக் – ஷோ டைம்

அதன்பின்னர், தேர்தல் பிரச்சாரங்களை திட்டமிடுவது முதல் களத்தில் வேட்பாளரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதுவரை தீர்மானித்தது இந்த இரண்டு நிறுவனங்கள்தான். அவர்கள் சொல்லும் வேலையை மட்டுமே செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது திமுகவிற்காகவே உருவாக்கப்பட்ட PEN நிறுவனம். கள எதார்த்தத்திற்கு ஒத்துவராத பல திட்டங்களை, வியூகம் என்ற பெயரில் வகுத்த ஐ-பேக் மற்றும் ஷோ-டைம் நிறுவன நிர்வாகிகள், அதனை PEN நிறுவன நிர்வாகிகளை வைத்து களத்தில் செயல்படுத்தத் தொடங்கினர். அப்போதே இரு தரப்பிற்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் எழுந்தன. இருப்பினும், வெளியே இருந்து வந்த இந்த இரண்டு வியூக நிறுவனங்கள் சொல்வதே ’வேத வாக்கு’ என்ற சொல்லப்பட்டுவிட்ட நிலையில், வேறு வழியின்றி அதனையும் களத்தில் செயல்படுத்தினர். அதன் எதிர்வினையைதான் திமுக இன்று அனுபவிக்கிறது.

விஜய்க்கான ஆதரவை கூட கணிக்கத் தவறிய தற்குறிகளா ஐபேக் – ஷோ டைம் ?

குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு பெருகி வருகிறது என்பது பள்ளிக் கூட குழந்தைக்கு கூட தெரியும்போது, இந்தியாவையே தங்களுடைய வியூகத்தால் புரட்டிப் போட்டுவிடுவோம் என்று தம்பட்டம் அடித்த ஐ-பேக், ஷோ-டைம் வியூக நிறுவனங்களுக்கு தெரியாததுதான் பெரிய ஆச்சர்யம். விஜய் 10% கூட வாக்கு எடுக்க மாட்டார், அவர் பிரிக்கப்போவது அதிமுகவினர் வாக்குகளை மட்டும்தான், அது திமுகவிற்குதான் சாதகம் என தங்களுக்கு தோன்றியதையெல்லாம் திமுக தலைமைக்கு ரிப்போர்டாக ரெடி செய்து கொடுத்தார் ராபின் ஷர்மா. அதனை நம்பிய திமுக தலைமை இன்று ஏமாற்றத்துடன் நிற்கிறது.

ஆட்சியும் போச்சு, கோடிக் கணக்கில் பணமும் போச்சு…

முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில், தேர்தல் வியூகம் என்ற பெயரில் 250 கோடி ரூபாயை, கன்சல்டிங் ஃபீஸ் என்ற பெயரில் வாரிசுருட்டிக்கொண்டு அடுத்த கட்சியை நோக்கி நகர்ந்திருக்கிறது ஐபேக்கும், ஷோ டைமும். ஆனால், இன்னும் அதிர்ச்சியில் இருந்து நகர முடியாமல் நிற்பது திமுகவும், அந்த கட்சியின் நிர்வாகிகளும்தான்.

இனிமேலாவது வடநாட்டு வியூக வகுப்பு நிறுவனங்களை நம்பி திமுக தலைமை மோசம் போய்விடக்கூடாது என அழாத குறையாக அழுது வைக்கிறார்கள் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.