தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினையே வீழ்த்தி ‘ஜெயண்ட் கில்லர்’ (Giant Killer) என ஒட்டுமொத்த அரசியல் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த தவெக-வின் வி.எஸ். பாபுவுக்குப் புதிய அமைச்சரவையில் மிக முக்கியத் துறை ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின்போது சென்னை ஆர்.கே.நகர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் திமுகவின் முக்கியத் தூணான அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் வியூகங்களை உடைத்தெறிந்து, பம்பரமாகச் சுழன்று களமாடி மு.க. ஸ்டாலினையே தோற்கடித்த வி.எஸ். பாபுவின் இந்த இமாலயச் சாதனைக்குப் பரிசாக, புதிய தவெக அமைச்சரவையில் அவருக்கு மிகவும் சக்திவாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகப் பனையூர் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
திமுக ஆட்சியில் இதே துறையைத் தன் வசம் வைத்திருந்த சேகர்பாபுவுக்குச் செக் வைக்கும் விதமாகவும், ஆன்மீகமும் பகுத்தறிவும் கலந்த தவெக-வின் சித்தாந்தத்தை நிலைநிறுத்தவும், வடசென்னை அரசியல் களத்தில் பழுத்த அனுபவம் வாய்ந்த வி.எஸ். பாபுவிடம் அறநிலையத்துறையை ஒப்படைக்கத் தலைவர் விஜய் பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளதாகக் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.