PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
க.சே.ரமணி பிரபா தேவி May 06, 2026 09:14 PM

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 48 மணி நேரம் முடிவதற்குள் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு விரைவில் கடிதம் அனுப்ப உள்ளது.

இரு மாநிலங்களுக்கும் பிரதம மந்திரி ஸ்ரீ திட்டத்தை விரைவில் செயல்படுத்துமாறு கல்வி அமைச்சகம் விரைவில் கடிதம் அனுப்பத் தயாராகி வருகிறது. கல்வி அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில், "மாநிலங்கள் இப்போது பிரதம மந்திரி ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். பிரதம மந்திரி ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநில தலைமைச் செயலாளர்களுக்கு நாங்கள் கடிதம் எழுதுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

ரூ.2,151 கோடி நிலுவை

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய சுமார் ரூ.2,151 கோடி நிதியை மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான 2 நாட்களிலேயே பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கூறுவதா என்று கேள்வி எழுந்துள்ளது

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மத்திய அரசின் PM SHRI திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற அரசியல் நிபந்தனையுடன் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை தொடர்ந்து நிலுவையில் வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை தாமதப்படுத்தி, புதிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் PM SHRI திட்டத்தை மாநிலத்தின் மீது திணிக்க முயற்சிப்பது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு நேரடி அச்சுறுத்தலாகும்.

அரசியல் அழுத்தத்திற்கு இடம் கொடுக்க முடியாது

தமிழ்நாட்டில் அமைவிருக்கும் புதிய அரசு, எந்த அரசியல் அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் மாநிலத்தின் கல்வி உரிமை மற்றும் மொழி உரிமையை உறுதியாக பாதுகாக்க வேண்டும். நிதிக்காக மாநிலத்தின் கொள்கை சுயாட்சியை விட்டுக்கொடுப்பது எதிர்கால தலைமுறைகளின் கல்வி உரிமையை பாதிக்கும் அபாயகரமான முன்னுதாரணமாக மாறிவிடும். தமிழகத்தின் நீண்டகால சமூகநீதி கல்வி பாரம்பரியத்தை பாதுகாப்பது புதிய அரசின் முக்கிய பொறுப்பாக இருக்கும்.

எனவே, மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,151 கோடி கல்வி நிதியை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும். மாநில உரிமைகளை மீறும் வகையில் கல்வியில் தலையிடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இல்லையெனில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களை ஒன்றிணைத்து மாநிலம் முழுவதும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்போம்’’ என்று SFI தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.