விஜயின் தவெக நடந்து முடிந்த தேர்தலில் 34.92 சதவீத வாக்குகளை பெற்றதோடு 108 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தனிப்பெரும்பனை இல்லை என்றாலும் அதிக வாக்குகள் மற்றும் தொகுதிகளில் பெற்ற தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தவெக தரப்பு ஆளுநருக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டது.
மேலும், இன்று மாலை 3.30 மணியளவில் விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க தங்களை அழைக்குமாறு கடிதம் கொடுத்தார். தவெகவுக்கு ஆட்சி அமைக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொடுத்துள்ளது. எனவே, இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இதையடுத்து விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. நாளை அவர்கள் தங்களின் முடிவை கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், தவெகவுக்கு ஆதரவு இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
விஜய் இன்னமும் 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவை ஆளுநரிடம் நிரூபிக்கவில்லை. ஆனால், நாளை பதவியேற்கவேண்டும் என்கிற ஆசையில் விஜய் இருக்கிறார். நேரு விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விஜய் முழு ஆதரவையும் நிரூபிக்காத நிலையில் நாளை பதவியேற்பாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சினிமா செய்தியாளர் மற்றும் அரசியல் விமர்சகர் பிஸ்மி தனது எக்ஸ் தளத்தில் ‘ஆதரவு எம்எல்ஏக்களின் முழுப்பட்டியலையும் கொடுத்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பேன் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் முரண்டு பிடிக்கிறார். எனவே, மே 7ம் தேதியான நாளை விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க வாய்ப்பில்லை. நாளை மாலைக்குள் ஆளுநர் கேட்ட பட்டியலை தவெக கொடுத்தால் மே 8ம் தேதி பதவியேற்க வாய்ப்புண்டு.
அரசியலில் 8 ராசியில்லாத எண் என நினைத்தால் அன்றும் பதவி ஏற்பு நடக்காது. மே 9ம் தேதி அஷ்டமி என்பதால் பதவி ஏற்பு நடக்காது. மே 10ம் தேதி அஷ்டமி என்பதாலும் பதவி ஏற்பு விழா நடக்காது. மே 11 மீண்டும் நவமி.. மே 12ம் தேதி செவ்வாய்கிழமை.. எனவே பதவியேற்பு நடக்காது .அடுத்த வாய்ப்பு மே 13ம் தேதி புதன்கிழமைதான். அன்றைக்கு முகூர்த்த நாள் என்பது கூடுதல் தகவல்’ என பதவிட்டிருக்கிறார்.