தேர்தலில் வெற்றி; தவெக தலைவர் விஜய்க்கு காந்தியின் பேரன் 05 அறிவுரைகள் கூறி கடிதம்..!
Seithipunal Tamil May 07, 2026 04:48 AM

தமிழக சட்டமன்ற தேர்தல் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 118 என்ற பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் விஜய் யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து, 05 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ள நிலையில், தவெகவிற்கு ஆதரவு  தெரிவித்துள்ள நிலையில் 113 எம்.எல்,ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், விஜய் பின்பற்ற வேண்டிய சட்டப்பேரவை மரபு முதல் அவர் பற்றிக்கொள்ள வேண்டிய கொள்கை என பட்டியலிட்டு 05 யோசனைகளைக் குறிப்பிட்டுள்ளார். 

''அன்புள்ள ஜோசப் விஜய் உங்களுடைய பிரம்மாண்ட வெற்றிக்கு வாழ்த்துகள். உங்களுக்காக வாக்களித்த 35% மக்களில் நானில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது நான் மிரண்டு போனேன். அப்போது எனக்கு ஓர் எண்ணம் உதித்தது. விஜய் அரசியலுக்கு புதியவர். அனுபவமற்றவர். அதுவே அவர் சுத்தமானவர் என்பதற்கும் அடையாளம்.

அவருக்கு சில உண்மைகள் சொல்லப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவருக்கு அது புரியும். அவருடைய நடுத்தர வயதில் அவரை இளைஞர்களின் ஞானம் தட்டி எழுப்பியுள்ளது.

அதனால் சில விஷயங்களை நான் உங்கள் முன்னால் வைக்கலாமா?

01. முதலாவதாக, நீங்கள் வாக்குகள் வென்றுள்ளீர்கள். ஆனால் இன்னமும் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. நீங்கள் இந்தியாவின் கூட்டாட்சி மற்றும் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாப்பதை முதன்மைக் கடமையாக செய்ய வேண்டியது அவசியம். உங்களின் கீழ் தமிழகம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மரியாதை சிதையாமல் பார்த்துக் கொள்ளட்டும். உங்கள் நாற்காலியை தக்கவைத்துக் கொள்வதற்கான எந்தவொரு இக்கட்டான தருணமும் அதில் நீங்கள் சமரசம் செய்துவிடாமல் பார்த்துக் கொள்ளட்டும்.

02. இரண்டாவதாக, நீங்கள் சட்டப்பேரவைக்குள் விஜய்யாக நுழையுங்கள். உங்கள் பெயருக்கு அர்த்தமான வெற்றி உங்களுடன் வரும். ஆனால், வெற்றி என்பது மிடுக்கில் அல்ல, கற்றலில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வெற்றிகொண்ட மு.க.ஸ்டாலின், ஒரு சமூகத்தின் சுய மரியாதைக்காக சிந்திக்கும் பாரம்பரியப் பின்னணியைக் கொண்டவர். பெரியாரால் வளர்த்தெடுக்கப்பட்ட சமூக சமத்துவத்துக்காக நிற்பவர். பதிவியிலிருந்து விடைபெறும் நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையே தலைமைப் பண்பின் ஊற்றுதான். அவர் சட்டப்பேரவையில் இல்லை என்பதே வேதனையனது.

அவரிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருக்கிறது. ஒரு புத்தும் புது பலகை. அவரிடம் உங்களுக்கு வசப்படாத ஒன்று இருக்கிறது. அது அனுபவம். அதனால் எது திராவிடம் எது திராவிடம் அல்ல வார்த்தைய அலங்காரத்துக்குள் எல்லாம் தயவுகூர்ந்து செல்லாதீர்கள். அவர் சட்டப்பேரவையில் உங்க்ளுக்கு முன்னவரே தவிர உங்களின் எதிரி அல்ல. அதேபோல் சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் இருப்பு உங்களுக்கு ஒரு காதல் டூயட் போல அமையட்டுமே தவிர கசப்பான போட்டியாக இருக்க வேண்டாம். ஃபெடரரை நடால் எதிர்கொள்வதெல்லாம் திறன் சமன்பாடு போல் இருக்குமே! அப்படி இருக்கட்டும்.

03. மூன்றாவதாக, உங்களின் கொள்கை என்னவென்று கேட்கப்படும். அது உங்களை எப்போதும் குழப்பமடையச் செய்யக் கூடாது. உங்கள் கொள்கை பற்றி கேட்பவர்களிடம் “எனது கொள்கை மனசாட்சிப் படி நடப்பது என்று சொல்லுங்கள்.”

04. அடுத்ததாக, உங்களுக்கு அமையும் அதிகாரிகள், உங்களுடைய சகாக்களை நம்புகள். அவர்களை ஏவலாளிகளாகப் பார்க்காதீர்கள். அவர்கள் துதிபாடுவதே சேவை என்றும் நினைக்கலாம். அந்தத் தவறானப் பார்வையிலிருந்து அவர்களை விடுவியுங்கள். சர்தார் படேல், உள்துறை அமைச்சராக இருந்தபோது அதிகாரிகள் தங்களின் பார்வைகளை அச்சமில்லாமல், வெளிப்படையாக வழங்க ஊக்குவித்தாரோ அதுபோல் நடந்து கொள்ளுங்கள். அதிகாரிகளின் முரண் கருத்துகளுக்கு செவி கொடுங்கள். மேலும், வெளியேறும் அமைச்சர்கள் மீதான அத்தனை விமர்சனங்களையும் புறந்தள்ளுங்கள்.

05. கடைசியாக, உங்கள் ஆட்சியில் தமிழகத்தில் நல்லாட்சி தொடர்வதிலும், பொருளாத வளர்ச்சி நீடிப்பதிலும் சுற்றுச்சுழல் பாதுகாப்பை முதன்மை இலக்காகக் கொள்ளுங்கள். இவற்றைத் தாண்டி வெறுப்புக்கு அப்பாற்பட்ட, அச்சத்தை கடந்த, நியாயமான இந்தியாவுக்கான கலங்கரை விளக்கமாக இருங்கள்.

ஒரு தனிப்பட்ட ரீதியிலான கருத்தைச் சொல்ல வேண்டுமானால், ஒரு கிறிஸ்துவனாக நீங்கள் இந்த அரசாங்கத்தின் தலைவராக இருக்க நேர்ந்தால், அந்தப் பரிசை கடவுளின் தலையீடாகக் கொண்டாடி, தமிழகத்தின் மதச்சார்பற்றத் தன்மையை உயர்த்திப் பிடியுங்கள். அமைதி காக்கவோ, அறிந்து கொள்ளவோ உங்களை யாரும் கட்டளையிடவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வள்ளுவர் கூட நீங்கள் அதைச் செய்ய விரும்பமாட்டார்.

ஒரு முதல்வராக உங்களுக்கு நிறைவான எதிர்காலம் கிட்ட வாழ்த்துகள்.'' என  அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.