தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு ஆழமான தங்கச் சுரங்கங்களில், பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறை இடுக்குகளில் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.3 கிலோமீட்டர் கீழே தேங்கியிருந்த தண்ணீரில் வினோதமான உயிரினம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஹேலிசபலோபஸ் மெபிஸ்டோ (Halicephalobus mephisto) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினம், அரிசி தானியத்தை விட சிறியது மற்றும் இதற்கு கண்கள் கிடையாது என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் 'டெவில் வார்ம்' (Devil Worm) என பெயர் சாட்டியுள்ளனர்.

பொதுவாக இவ்வளவு ஆழமான பகுதிகளில் பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரினங்கள் மட்டுமே வாழ முடியும் என்று கருதப்பட்டது. ஆனால், வெளிச்சம் இல்லாத, மிகக் குறைந்த ஆக்சிஜன் கொண்ட, அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் நிறைந்த இந்த ஆழமான பகுதியில் ஒரு பல செல் உயிரினம் (Multicellular organism) வாழ்வது அறிவியல் விதிகளைத் தகர்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயிரினம் அங்குள்ள பாக்டீரியாக்களை உணவாகக் உட்கொண்டு உயிர்வாழ்கிறதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதன்படி, 2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்த புழுவின் உடலில் அதிகப்படியான வெப்பம் மற்றும் மன அழுத்தத்தைத் தாங்கி உயிர்வாழ உதவும் சிறப்பு மரபணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் உடலில் உள்ள 'சைட்டோக்ரோம் சி ஆக்ஸிடேஸ்' (Cytochrome c oxidase) என்ற புரதம், ஒரு உயிரியல் சென்சார் போல செயல்பட்டு, சுற்றுச்சூழலில் ஏற்படும் திடீர் வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப இந்த உயிரினம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள உதவுகிறது.
பொதுவாக பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான எல்லை எது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவுகிறது என்றும், பூமியின் ஆழத்தில் இத்தகைய சிக்கலான உயிரினங்கள் வாழ முடியும் என்றால், இதே போன்ற கடினமான சூழல் கொண்ட மற்ற கிரகங்கள் அல்லது நிலவுகளிலும் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.