உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மெக்சிகோ சிட்டி, கற்பனை செய்ய முடியாத வேகத்தில் பூமிக்குள் மூழ்கி வருவதாக நாசா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோள் வழங்கிய தரவுகள் மூலம் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆய்வின்படி, இந்த நகரத்தின் சில பகுதிகள் ஒரு மாதத்திற்கு சுமார் 2 செ.மீ. வேகத்திலும், ஓராண்டிற்குச் சுமார் 25 செ.மீ. வேகத்திலும் பூமிக்குள் இறங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகரத்தின் குடிநீர் தேவைக்காக 60 சதவீத நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால், பூமிக்குக் கீழே உள்ள களிமண் தளம் சுருங்கி நிலம் மூழ்கி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மெக்சிகோ சிட்டி ஒரு பழைய ஏரியின் மீது கட்டமைக்கப்பட்டிருப்பதால், நிலத்தடி நீர் குறையும் போது ஏரிப் படுகை பலமிழந்து நகரத்தைத் தாங்கும் திறனை இழக்கிறது.
மேலும், அங்கு அதிகரித்து வரும் பிரம்மாண்டமான கட்டிடங்களின் எடையும் இந்த நிலச்சரிவை மேலும் வேகப்படுத்துவதாக நாசா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். நிலம் ஒருமுறை சுருங்கத் தொடங்கிவிட்டால், அந்தப் பாதிப்பை மீண்டும் சரிசெய்ய முடியாது என்பதால் மெக்சிகோ சிட்டியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கனவே அங்குள்ள விமான நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சாலைகள் பிளவுபடுவது மற்றும் பழமையான தேவாலயங்கள் ஒருபுறமாகச் சாயத் தொடங்குவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தண்ணீர் முற்றிலும் இல்லாத 'டே ஜீரோ' நிலையை நோக்கி அந்த நகரம் சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இதனைத் தடுக்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.