சீனப் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து... இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி!
Dinamaalai May 07, 2026 09:48 AM

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங் பகுதியில் இயங்கி வரும் ஒரு பெரிய பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று (மே 6) திடீரென ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பட்டாசுகளில் 70 சதவீதம் இந்த மையத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதால், விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்துள்ளது. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் முதலில் மீட்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் 61 பேர் படுகாயமடைந்துள்ளதால், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்தின் காரணமாக அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகச் சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விபத்து நடந்த தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லியுயாங் பகுதி சீனாவிற்குத் தேவையான 60 சதவீதப் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் ஒரு முக்கியத் தொழில் மையம் என்பதால், இந்தத் துயரச் சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்குச் சீனா அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.