
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நீடிக்கும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பிற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், தேர்தல் முடிவுகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாகத் தங்கள் கட்சியின் செயற்குழுவில் ஆலோசித்துத் தான் முடிவெடுக்க முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை காலை நடைபெறவுள்ள கூட்டத்தில் தங்களின் முடிவை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார். எத்தகைய முடிவையும் உணர்ச்சிவசப்பட்டு எடுத்துவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், பாஜக ஆளுநர் மூலமாக நெருக்கடி கொடுத்து வருவதாக அவர் பகிரங்கமாகச் சாடினார். இதற்கிடையே, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அவமானம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva