நம்ம கூட்டணியிலேயே இருங்க!.. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் சொன்ன ஸ்டாலின்!..
Webdunia Tamil May 07, 2026 07:48 PM


தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு அமையவில்லை. ஏனெனில், ஆட்சியமைக்க 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க இன்னும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய்க்கு தேவைப்படுகிறது..

காங்கிரஸை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாக திமுக கூட்டணியில் இருந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. அதாவது, தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திருக்கிறது..

ஒருபக்கம் விடுதலைச் சிறுத்தை மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கும் தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருக்கிறார். தவெக ஆட்சி அமைய நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்னமும் அவர்கள் தங்கள் முடிவை சொல்லவில்லை.

இந்நிலையில் இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள முக ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்ற திருமாவளவன், சண்முகம், வீர பாண்டியன் போன்ற கூட்டணி தலைவர்கள் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, ‘திமுக கூட்டணியில் தொடருங்கள்’ என ஸ்டாலின் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.. எனவே, விஜய்க்கு திருமா மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.