நடிகரும் இயக்குநருமான ஆர்,ஜே.பாலாஜி தான் இயக்கியுள்ள கருப்பு படத்தின் டிரைலர் தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம், வரும் மே 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சிவதா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக சூர்யா இரட்டை தோற்றத்தில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
கருப்பு திரைப்படம் ஒரு சமூக-அரசியல் பின்னணியைக் கொண்ட கதையாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் அதிரடி, நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த திரைக்கதை இடம்பெறும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் டிரைலர் வெளியீடு தாமதமாகியதற்கான காரணத்தை விளக்கும் வகையில் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசிய அவர், “நான் சீட் பெல்ட் போட்டு வீடியோ போட்டாலே ஏதாவது ஒரு அப்டேட் இருக்கும். மே 14ஆம் தேதி கருப்பு படம் வெளியாக இருக்கிறது. இன்னும் டிரைலர் வரலையே என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். டிரைலர் ரெடியாக உள்ளது. ஆனால் நம்மைச் சுற்றி அரசியல் நிகழ்வுகள் நடந்துக்கொண்டிருக்கிறது. நாமெல்லாரும் ஆசையாக ஓட்டுப்போட்டு ஒரு விஷயம் நடந்தது. அது நல்லபடியாக முடிய வேண்டும்; அதற்கு கருப்பன் துணை இருப்பார். விரைவில் வெளியாகவுள்ள டிரைலர் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அரசியல் சூழ்நிலைகள் காரணமாக டிரைலர் வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அவர் தெரிவித்த நிலையில், படத்தின் டிரைலரே வெளியாகவில்லை என்றால் படத்திற்கு புரமோஷனும் வராது ஓபனிங்கும் வராது என கலாய்த்து வருகின்றனர்.