நாங்க ஒன்னும் சொல்லாம வரல..! கனிமொழி, டி.ஆர் பாலுகிட்ட சொல்லிட்டு தான் வந்தோம்… செல்வப் பெருந்தகை காட்டம்… திமுகவுக்கு காங்கிரஸின் முதல் பதிலடி..!!
SeithiSolai Tamil May 10, 2026 10:48 PM

தமிழகத்தில் இன்று பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் முதற்கட்டமாக காங்கிரஸ் இடம்பெறாதது குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். அமைச்சரவையின் முதற்கட்டப் பட்டியலில் காங்கிரஸ் இடம்பெறவில்லை என்றாலும், இரண்டாவது பட்டியலில் நாங்கள் அரசின் ஒரு அங்கமாக இருப்போம். இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எந்தெந்தத் துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை எங்களது கட்சியின் உயர்மட்டக் குழு விரைவில் முடிவு செய்யும்,” என்றார்.

திமுகவுடன் 10 ஆண்டுகால உறவைத் திடீரென முறித்துக் கொண்டதாக எழுந்துள்ள புகார் குறித்துக் கேட்டபோது, அவர் மிகவும் காட்டமாகப் பதிலளித்தார். நாங்கள் சொல்லாமல் ஒன்றும் வரவில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுகவின் டி.ஆர்.பாலுவிடமும், ராகுல் காந்தி கனிமொழியிடமும் விரிவாகப் பேசிய பின்னரே இந்த முடிவை எடுத்தோம். திமுக கண்டனம் தெரிவிப்பது அவர்களது விருப்பம். ஆனால், இது எங்கள் கட்சியின் உரிமை எனத் தெரிவித்தார்.

தவெக – காங்கிரஸ் கூட்டணி இந்தத் தேர்தலோடு முடிந்துவிடாது என்றும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஏற்கனவே கூறியிருப்பதை அவர் நினைவுகூர்ந்தார். பெண்களுக்குத் தங்கம் உள்ளிட்ட அதிரடி வாக்குறுதிகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “முதலமைச்சர் இன்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்கள் அதற்குச் சற்று பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்,” எனச் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.