தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற 29 வயதான கீர்த்தனாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக-வின் பலம் 120 ஆக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். காவல் மற்றும் உள்துறை, பொது நிர்வாகம் ஆகிய பொறுப்புகளை அவர் தன்வசம் வைத்துள்ளார்.
விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையைக் கீர்த்தனா பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான இவர், முதுகலை புள்ளியியல் பட்டதாரி ஆவார். தமிழ், இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் புலமை பெற்றவர்.
நேரடி அரசியலுக்கு வரும் முன், பிரசாந்த் கிஷோரின் அரசியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கீர்த்தனா. திமுக, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த குழுவில் முக்கியப் பங்காற்றியவர்.
சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (அதிமுக) மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ அசோகன் (காங்கிரஸ்) ஆகிய இரு பெரும் புள்ளிகளை எதிர்த்துப் போட்டியிட்ட கீர்த்தனா, 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இவருக்கு 1,06,000-க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. அரசியல் நுணுக்கங்களை நன்கு அறிந்த இளைஞர்களுக்குத் தனது அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் வாக்கின்படி, கீர்த்தனாவுக்கு இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.